பழைய பாராளுமன்றம் கூட்டப்படுவதை பொதுமக்கள் விரும்பவில்லை - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 29, 2020

பழைய பாராளுமன்றம் கூட்டப்படுவதை பொதுமக்கள் விரும்பவில்லை - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

(எம்.மனோசித்ரா) 

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாடு சுதந்திரமடைந்தது என்ற நிலைமை ஏற்படும் போது தேர்தலை நடத்தி புதிய பாராளுமன்றத்தைத் தெரிவு செய்ய முடியும் என்று தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க, பழைய பாராளுமன்றம் கூட்டப்படுவதை பொதுமக்கள் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள சவாலுக்கு மத்தியில் நாம் எவ்வாறு வாழ்வாத்தை உறுதிப்படுத்திக் கொள்வது என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். 

பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுகிறது. இது சோர்வடைந்துள்ள மக்களை பலப்படுத்துவதற்காகும். இந்த சந்தர்ப்பத்தில் அரசியல் பேதத்துடன் யாரும் செயற்படக்கூடாது. ஆனால் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் குறைபாடுகள் காணப்பட்டால் அதனை எடுத்துக் கூறலாம். எதிர்தரப்பினரே இவ்வாறு விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். 

மறுபுறம் தேர்தல் நடத்தப்பட வேண்டுமா இல்லையா என்றும் பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்றும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் பாராளுமன்றம் கூட்டப்படுவதை மக்கள் விரும்பவில்லை. 

அரசியல்வாதிகளால் எதனையும் தீர்மானிக்க முடியாது. சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மாத்திரமே அதற்கான அதிகாரம் உள்ளது. வீட்டுக்குள்ளிருந்தாலும் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். 

இந்நிலையில் இன்னும் எவ்வளவு காலத்திற்கு வைரசுக்கு பயந்து ஒழிந்து கொண்டிருக்க முடியும் ? இவை பற்றி சிந்தித்து தீர்க்கமானதொரு முடிவு எடுக்கப்பட வேண்டும். அதற்கமைய கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாடு சுதந்திரமடைந்தது என்ற நிலைமை ஏற்படும் போது தேர்தலை நடத்தி புதிய பாராளுமன்றத்தைத் தெரிவு செய்ய முடியும் என்றார்.

No comments:

Post a Comment