(செ.தேன்மொழி)
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில் அரசாங்கம் 5000 ரூபாவை நிவரணமாக வழங்கி வருகின்றது. இதனை 10 ஆயிரம் அல்லது 15 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல, வைரஸ் பரவலை அரசாங்கம் தேர்தலில் வெற்றிக் கொள்வதற்கு பயன்படுத்த முயற்சிப்பதாகவும் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியுள்ளதாவது, கொவிட்-19 வைரஸ் பரவல் தொடர்பில் அரசாங்கம் விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைக்கமைய செயற்படுவதாக தோன்றவில்லை.
தேசிய பாதுகாப்பு என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அதனை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரியவில்லை. கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் அனைவரும் விளக்கம் பெற்றிருந்த போதும் அரசாங்கம் விளக்கத்துடன் செயற்படுவதாக தோன்றவில்லை.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொரோனா வைரஸ் தொடர்பில் உரை நிகழ்த்திய போது ஆளும் தரப்பினர் அதனை கேலி செய்தனர். சுகாதார அமைச்சர் எமது நாட்டுக்கு வைரஸினால் நெருக்கடி நிலைமையை ஏற்பட வாய்ப்பில்லை என்றார். தற்போது என்ன நிகழ்ந்துள்ளது.
இராணுவத்தினருக்கு வைரஸிலிருந்து பாதுகாப்பதற்கு அவசியமான பாதுகாப்பு அங்கிகளை பெற்றுக் கொடுக்காததினால் இராணுவத்தினர் பலர் வைரஸ் தொற்றுக் குள்ளாகியுள்ளனர். இவர்களை பாதுகாப்பது எமது பொறுப்பாகும்.
அரசாங்கம் வைரஸ் தொற்றையும் தேர்தலை வெற்றி கொள்வதற்கு பயன்படுத்துவதாகவே எமக்கு தோன்றுகின்றது. வைரஸ் பரவல் தொடர்பில் உலகளாவிய ரீதியில் பெரும் நெருக்கடி நிலைமை தோற்றம் பெற்றிருந்த போதிலும் சர்வதேசத்திலிருந்து நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான வழிகள் மூடப்படவில்லை.
இலங்கையில் சர்வதேச விமான நிலையம் ஒன்றே இருக்கின்றது. நாட்டில் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும் தேர்தலை அறிவிப்பதற்காக நாட்டை முடக்காமல் வைத்திருந்தனர். இதனால் நாட்டு மக்களே பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர். வைரஸ் தொற்று தொடர்பில் அனைத்து கட்சித் தலைவர்களுடனும் கலந்துரையாடி முறையாக செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment