(எம்.மனோசித்ரா)
பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டாலும், நடத்தப்படாவிட்டாலும் நாமே ஆட்சியமைப்போம். அவ்வாறிருக்கையில் தேர்தலை துரிதமாக நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு என்ன தேவை உள்ளது என்று பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்பன்பில எதிர்தரப்பினரிடம் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கமே பாராளுமன்றத் தேர்தலின் பின்னரும் ஆட்சியமைக்கும் என்பதால் தேர்தல் நடத்தப்பட்டாலும் நடத்தாமல் விடப்பட்டாலும் தமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும் உதய கம்பன்பில தெரிவித்தார்.
கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி முயற்சிப்பதாக எதிர்க்கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படையற்றதாகும்.
இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளர் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி இனங்காணப்பட்டார். குறித்த சீனப்பெண் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி முழுமையாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார். முதலாவது நோயாளி இனங்காணப்பட்டது முதல் மார்ச் 2 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டது வரை இலங்கையில் எந்த நோயாளியும் இனங்காணப்படவில்லை.
வைரஸ் பரவல் அற்ற பின்புலத்திலேயே ஜனாதிபதியால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அதன் பின்னர் மார்ச் மாதம் 11 ஆம் திகதி இலங்கையில் முதலாவது நோயாளி இனங்காணப்பட்டார். அதாவது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 9 நாட்களுக்குப் பின்னராகும்.
இந்நிலையில் ஜூன் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானித்தது. ஜனாதிபதி அந்த தீர்மானத்தை எடுக்கவில்லை. ஆணைக்குழுவும் சட்ட ரீதியாக தமக்குள்ள பொறுப்பையே நிறைவேற்றியிருக்கிறது. தேர்தல் இடம்பெறவில்லை என்பதால் எமக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. காரணம் நாமே ஆட்சியிலிருக்கின்றோம். ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அரசாங்கமும் எமதாகும்.
இந்நிலையில் தேர்தல் நடத்தப்பட்டாலும் நாமே வெற்றி பெறுவோம். தற்போது ஆட்சிலிருப்பதும் நாமே தேர்தலுக்கு பின்னரும் நாமே ஆட்சியமைப்போம் என்றால் எமக்கு தேர்தல் நடத்தப்படுவதும் நடத்தாமலிருப்பதும் ஒன்றேயாகும். அவ்வாறியிருக்கையில் தேர்தலை துரிதமாக நடத்த வேண்டிய தேவை எமக்கு என்ன இருக்கிறது என்று நாம் எதிர்க்கட்சியிடம் கேள்வியெழுப்புகின்றோம்.
எம்மைக் குற்றஞ்சாட்டும் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்றத் தேர்தலை கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நடத்துவதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். புதிய ஜனாதிபதியொருவர் தெரிவு செய்யப்பட்டால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் பாராளுமன்றத்தை தெரிவு செய்வது சாதாரணமானதொரு விடயமாகும்.
எனினும் 19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் நான்கரை வருடங்களுக்கு பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது என்ற உறுப்புரைகள் உள்ளடக்கப்பட்டதன் காரணமாகவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு பதவியேற்றவுடனேயே பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாமல் போனது.
நான்கரை வருடங்கள் பூர்த்தியடையாமல் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது என்ற உறுப்புரையை அரசியலமைப்பில் உள்ளடக்கிய ஐக்கிய தேசிய கட்சியே கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
காரணம் அரசியலமைப்பின் படி மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்தே ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் கிடைக்கப் பெற்றது. அதற்கமையவே ஜனாதிபதி செயற்பட்டுள்ளார் என்றார்.
No comments:
Post a Comment