(எம்.மனோசித்ரா)
நாட்டை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கொண்டு சிலர் அரசியல் செய்ய முற்படுவது கவலைக்குரிய விடயமாகும். வைரஸ் பரவலின் பாரதூரத் தன்மையை விளங்கிக் கொள்ளாமையின் காரணமாகவே இஸ்லாமிய மத சம்பிரதாயங்களை பின்பற்றி உயிரிழந்த கொரோனா வைரஸ் நோயாளி அடக்கம் செய்யப்பட வேண்டும் போன்ற கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த இஸ்லாமிய நபர் மத கோட்பாடுகளை மீறி தகனம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றமை குறித்த சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டை வினவிய போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, இஸ்லாம் மதத்தில் கடைபிடிக்கப்படும் சம்பிரதாயங்கள், கலாசாரங்கள் என்பவற்றுக்கு நாம் மதிப்பளிக்கின்றோம். எனினும் தற்போது நாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் மத ரீதியான வழிமுறைகளை விட மருத்துவத் துறையினரின் ஆலோசனைகளே பின்பற்றப்பட வேண்டும்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பதிவாகிய முதலாவது மரணம் ஒரு கத்தோலிக்க சகோதரருடையதாகும். அவருடைய சடலமும் இதே போன்று மருத்துவ ஆலோசனைகளின் பிரகாரமே தகனம் செய்யப்பட்டது.
எனினும் கத்தோலிக்க மதத்தில் இறப்பு ஏற்பட்டால் சடலத்தை தேவாலயத்திற்கு எடுத்துச் சென்று பிரார்த்தனைகளின் பின்னரே அடக்கம் செய்யப்படும். அவ்வாறு எந்த சம்பிரதாய முறைமையும் அதில் பின்பற்றப்படவில்லை.
இதேபோன்று பௌத்த மதம் அல்லது பிரிதொரு மதத்தை சார்ந்த மரணங்கள் பதிவானாலும் மருத்துவ ஆலோசனைகளே பின்பற்றப்படும்.
தகனம் செய்யப்படும் இடத்தில் இருப்பவர்கள் தமது பாதுகாப்பு ஆடைகளையும் எரிப்பதையும் செய்திகளில் காணக் கூடியதாக உள்ளது. எனவே நடைமுறையைப் புரிந்து அனைவரும் செயற்பட வேண்டும். இவற்றைக் கொண்டு அரசியல் இலாபம் தேட முற்படக்கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.
No comments:
Post a Comment