வீட்டுத் தோட்டச் சவாலில் ஈடுபட்டுள்ள பிரதமர் மஹிந்த உள்ளிட்ட பிரபலங்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 4, 2020

வீட்டுத் தோட்டச் சவாலில் ஈடுபட்டுள்ள பிரதமர் மஹிந்த உள்ளிட்ட பிரபலங்கள்

கொரோனா வைரஸ் எனப்படும் கொவிட் 19 தொற்றுக் காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் பெரும் சவால்களை நாளுக்குநாள் சந்திக்க வேண்டியுள்ளதுடன் அரசாங்கமும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வீட்டுத் தோட்டங்களை மக்கள் மத்தியில் ஊக்குவிக்க அரசாங்கமும் முக்கிய பிரபலங்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை வீடுகளில் வீட்டுத் தோட்டங்களை ஏற்படுத்த அரசாங்கம் இணையத்தளம் ஒன்றையும் ஆரம்பித்து அதனூடாக பொதுமக்களுக்கு பயிர்களின் விதைகள் மற்றும் வீட்டுத் தோட்டத்திற்கு தேவையானவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இச்செயற்திட்டத்திற்கென www.saubagya.lk என்ற புதிய இணையத்தளப் பக்கமொன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், தமது வீட்டுத் தோட்டத்திற்கு அவசியமான விதைகளை அந்த இணைப்பக்கத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இத்தருணத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் பாரியார் ஷிராந்தியும் இணைந்து வீட்டுத் தோட்ட சவாலில் (HomeGardenChallenge) ஈடுப்பட்டுள்ளார்கள்.

இது குறித்த புகைப்படத்தை பிரதமர் அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, #HomeGardenChallenge இல் பங்கேற்பதில் ஷிராந்தியும் நானும் பெருமகிழ்ச்சியடைகிறோம். கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் உலகைப் பெருமளவில் பாதித்துள்ள அதேநேரத்தில், எமது எதிர்காலச் சந்ததிகளுக்காக நிலைத்திருக்கக் கூடிய வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியத்தையும் இது கற்றுக் கொடுத்துள்ளது. மேலும், அனைவரையும் தத்தமது பங்கை இவ்விடயத்தில் ஆற்றுமாறு நான் ஊக்குவிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவைளை, நாமல் ராஜபக்ஷவும் அவரது பாரியாரும் இந்த திட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வீரர்களான இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன, டினேஸ் சந்திமல், திஸர பெரேரா உள்ளிட்ட சிலரும் வீட்டுத் தோட்ட சவாலில் ஈடுப்பட்டு தங்களது புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்கள்.

No comments:

Post a Comment