(நா.தனுஜா)
தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி கொரோனா வைரஸைக் கட்டுப்பட்டுத்துவதற்கு அவசியமான சுகாதாரப் பாதுகாப்பு வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருக்கிறார்.
இது குறித்து சஜித் பிரேமதாஸவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் காரணமாக ஒட்டுமொத்த மக்களும் மிகவும் விசனமடைந்திருக்கின்றனர்.
இந்த நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கு சுகாதாரப் பிரிவினர், பாதுகாப்புப் பிரிவினர், அத்தியாவசிய சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.
எவ்வாறிருப்பினும் இந்த நெருக்கடி நிலையின் காரணமாக சுகாதாரப் பாதுகாப்புப் பொருட்களுக்கான தட்டுப்பாடொன்று ஏற்பட்டிருப்பதை எம்மால் அவதானிக்க முடிகிறது.
அதனால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதை நோக்காகக் கொண்டு. அந்நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருக்கிறது.
அதன்படி எமது கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்களின் இணக்கப்பாட்டில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு உதவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக மேலும் பலர் இதற்கு உதவியளிப்பதற்கு முன்வந்துள்ளனர். இந்நிதி வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே முழுவதும் செலவிடப்படும்.
No comments:
Post a Comment