நிவாரண உதவிகள் ஒருங்கமைக்கப்பட வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 4, 2020

நிவாரண உதவிகள் ஒருங்கமைக்கப்பட வேண்டும்

நாடு எதிர்நோக்கியுள்ள கொரோனா அச்சத்திலிருந்து நாட்டு மக்களை மீட்க அரசாங்கம் பல்வேறு படி முறைகளை முன்னெடுத்து வருகின்றது. 

சுகாதார மேம்பாடுகளை மேம்படுத்தி கொரோனா தொற்றி இருக்கலாமென்ற சந்தேகமுள்ளவர்களைத் தனிமைப்படுத்தி, அடையாளப்படுத்தப்படுவோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிறப்பான வைத்திய சேவைகளை அடையாளப்படுத்தப்பட்ட வைத்தியசாலைகள் மேற்கொண்டு வருவதுடன், வைத்தியர்களும் இரவு, பகல் பாராது அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவது பாராட்டத்தக்கது. 

ஒரு பக்கம் இவ்வாறாக சிறப்பாக சிகிச்சையளிக்கப்படுகின்ற அதேவேளை, நோய் தொற்றாமலிருக்கவும் பல்வேறு முன்னெடுப்புக்கள் நடைமுறைப்படுத்தப்படுவது பாராட்டுக்குரியதே. 

அந்த வகையில், மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக கடுமையான முறையில் ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளை காலடிக்கு கொண்டு சேர்ப்பதிலும் இணைய வழி சேவைகளை வழங்குவதிலும் அரச, தனியார் நிறுவனங்கள் மற்றும் குறிப்பாக, வைத்தியசாலைகள், மருந்தகங்களும் தம்மாலான சேவைகளை வழங்கி வருவது சிறப்புக்குரியது. 

அதேநேரம், ஊரடங்கினால் பாதிக்கப்படுகின்ற மற்றும் சுய தனிமைப்படுத்தலில் இருக்கின்ற மக்களுக்கான தேவைகளையும் நிவாரணங்கள், சலுகைகள், கடன் திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தினாலும் மக்களின் தேவைகளை முற்று முழுதாக பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை. 

அந்த வகையில், ஊரடங்குச் சட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வருமானங்களை இழந்துள்ள மக்களுக்கான நிவாரணங்களை வழங்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு சமூக நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், தனவந்தர்கள் மீதுள்ளது. 

அதனடிப்படையில், பிரதேச ரீதியில் நிறுவனங்களின் சம்மேளனங்கள், உலமா சபைகள், சிவில் சமூக அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள், கழகங்கள், தனி நபர்கள், உள்ளூர் அரசியல் மக்கள் பிரதிநிதிகள் எனப்பல்வேறு தரப்பினர் எனப்பல்வேறு வழிகளில் உதவி வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில் இவ்வாறான உதவிகளும் முன்னெடுப்புக்களும் பாராட்டப்பட வேண்டியது. 

இவ்வாறு தனித்தனி அமைப்பாக தனி நபர்களாக மேற்கொள்ளப்படும் உதவிகள் ஒரு முகப்படுத்தப்பட்டு, உதவி வழங்குனர்கள் மூலம் கிடைக்கப் பெறுகின்ற உதவிகள் அனைத்தும் சரியான தரப்படுத்தலின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள், உதவி பெறத்தகுதியானவர்கள் என அடையாளங் காணப்படுவோருக்கு சென்றடைய பொறுப்பு வாய்ந்தவர்கள் நெறிப்படுத்த வேண்டும். 

உதவிகள் கிடைக்கப் பெறுகின்றது. உதவிகளை வழங்கியவர்கள் வழங்கப்பட்ட விதம், பெற்றுக்கொண்டவர்கள் பொருத்தமானவர்கள் தானா? என்பன போன்ற கேள்விகளை எம்மை நோக்கி கேட்கமாட்டார்கள் என்பதற்காக தம்மால் எடுக்கின்ற தீர்மானங்களுக்கமைய பகிர்தல் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறான உதவிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்ற போது, சரியான தரவுகள் சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து பெறப்படல் அவசியமாகின்றது. 

வெறுமனே பள்ளிவாயலுக்கு தவறாமல் குடும்ப வரி செலுத்துகிறார்கள், புஹாரிக்கு நார்சா, நோன்புக்கு கஞ்சி கொடுக்கிறார்கள், பள்ளிவாயலின் தேவைகளுக்கு உதவி செய்கிறார்கள், நிருவாகத்தில் அங்கம் வகிக்கிறார்கள், நிருவாகிகளின் உறவினர்கள் என்ற அடிப்படையில் பகிர்வது பொருத்தமனவர்களைச் சென்றடைய வழி வகுக்காது. 

அத்துடன், சரியான தரவுகளின் அடிப்படையில் நிவாரண வினியோகம் இடம்பெறாவிட்டால், பெறத்தகுதியில்லாதவர்களுக்கு அவ்வுதவிகள் போய்ச்சேர்வதுடன், தகுதியானவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறான தவறுகள் இடம்பெறாமலிருக்க நிவாரண உதவிகளைத் தலைமை தாங்கி முன்னெடுக்கின்ற அமைப்பும் கூடுதல் கவனமெடுக்க வேண்டியது அவசியமாவதுடன், பொது வெளியில் விமர்சனங்கள் எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும். தவறுகள் இடம்பெற்றதற்கான ஆதரங்களும் இல்லாமலும் இல்லை. 

நான் அறிந்த வகையில் பிரதேச பள்ளிவாயலூடாக வினியோகிக்கப்பட்ட நிவாரண வினியோகத்தில் வெளிநாட்டிலுள்ள சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ரூபாய்களை நிவாரணம் வழங்கிய ஒருவரும் அப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை தூரதிஸ்டவசமானது. இவ்வாறாக ஒருவரையொருவர் திருப்திப்படுத்தும் நோக்கில் வழங்கப்படும் நிவாரணங்களால் பெறத்தகுதியானவர்கள் பாதிக்கப்படுகின்ற நிலையினை அவதானிக்க முடிகிறது. 

அதேநேரம், நிவாரணங்களைச் சேகரிக்கின்ற பணியில், நிறுவனப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு இயங்குகின்ற சந்தர்ப்பத்தில் தனித்தனி அமைப்புக்களும் தனித்தனி நபர்கள், கழகங்கள் என தனித்தனியாக இவ்வாறான நிவாரண உதவிகளை வழங்குவதும் நிறுவன மயப்படுத்த முன்னெடுப்புக்களின் செயற்பாட்டுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தும். 

அதனையும் தனி நபர்களும் கழகங்களும் கவனத்திற்கொண்டால் ஒரு குறிப்பிட்ட சாரருக்கு உதவிக்கு மேல் உதவி கிடைக்காமலிருக்கவும் தேவையுடையோர் பாதிக்கப்படாமலிருக்கவும் வாய்ப்பாக அமையும். தனி நபர்கள் தங்கள் குடும்பங்களிலுள்ள வறியவர்களுக்கு வழங்குவது தவிர்க்க முடியாதவொன்று என்றாலும், அவர்களுக்கு பகிர்ந்து மீதமுள்ளவற்றையாவது இவ்வாறான பொது அமைப்புக்களுக்கு வழங்கலாம். 

அதேநேரம், முக்கியமான விடயத்தையும் கவனத்திற்கொள்ள வேண்டியது இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் பொருத்தப்பாடுடையதாக இருக்கும் என நம்புகிறேன். ஒவ்வொரு அமைப்புக்களும் கழகங்களும் தனித்தனியாக உதவிகளை வழங்கினாலும் ஒரு குறிப்பிட்ட தொகையை உதவி வழங்கக்கூடியவர்களிடமிருந்தே பெறுகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. 

இவ்வாறு தனித்தனி செயற்படுகின்ற அமைப்புக்கள், கழகங்கள் ஒரு குறிப்பிட்ட சாராரிடம் மாத்திரமே இவ்வாறான நிதி சேகரிப்புக்களையும் உதவிகளையும் எதிர்பார்க்கின்றனர். கோரிக்கை விடுக்கின்றனர். இதனால் அவ்வாறான உதவிகளை வழங்கக்கூடியவர்களும் தர்ம சங்கடமான நிலைக்குத் தள்ளப்படுவதுடன், ஒரே இடத்திற்கு வழங்க வேண்டிய உதவிகளைப் பகிர்ந்தளிக்க வேண்டிய நிலை உருவாவதுடன், அவர்கள் நியாயமான காரணங்களின் அடிப்படையில் வழங்க மறுக்கின்ற போது, விமர்சனங்களை எதிர்கொள்ளும் நிலையும் உருவாகிறது. 

அத்தோடு, தொடர் ஊரடங்குச் சட்டம் சகல தரப்பினரினதும் வருமானம், தொழில் முயற்சிகளில் எதிர்பார்க்காதளவு பாதிப்பை உண்டு பண்ணியுள்ளதையும் கவனத்திற் கொள்வோமாக. இவ்வாறான தனித்தனி உதவி கோரல்கள், உதவி வழங்கல்கள் ஒருமுகப்படுத்தப்படுகின்ற போது, நாம் எதிர்பார்க்கும் அடைவுகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமைவதுடன், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைப்பினர் கவனத்திற் கொள்ள வேண்டும். 

அதேநேரம், ஒரு முகப்படுப்படுத்தப்பட்டு இயங்குகின்ற அமைப்புக்களினால் சரியான முறையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. நாம் தனித்தனியாக மேற்கொள்கின்ற போது தான் அது பொருத்தமானவர்களைச் சென்றடையும் என்ற நியாயத்தையும் மறுப்பதற்கில்லை. 

ஏனென்றால், பிரதேச பள்ளிவாயல்களை நிவாரணப்பகிர்னர்களாகத் தெரிவு செய்கிற போது, நான் மேலே குறிப்பிட்ட தவறுகள் இடம்பெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவும் உள்ளது. இதற்கு தீர்வாக பிரதேசத்தில் காணப்படுகின்ற சகல அமைப்புக்களையும் உள்ளடக்கிய நிவாரணச் செயலணி ஒன்றை உருவாக்குவதனூடாக அல்லது பிரதேசத்தில் சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து இயங்குகின்ற சிவில் சமூக அமைப்பினூடாக இவ்வாறான நிவாரணப்பணிகளை ஒருமுகப்படுத்திச் செயற்படுத்துகின்ற போது, பிரதேச ரீதியாக சரியான தரவுகள் சேகரிக்கப்பட்டு, பொருத்தமானவர்களுக்கு உதவிகள் சென்றடைய வாய்ப்பாக அமையும். 

அதேநேரம், சரியான முறையில் பகிர்ந்தளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் வழங்கப்படுகின்ற உதவிகளை பொருத்தமானவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய அமானிதமும் பொறுப்பும் உள்ளதை குறித்த நிறுவனங்கள் உணர்ந்து செயற்பட வேண்டியதும் அவசியமாகின்றது. நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்டோரைச் சென்றடைய சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியதும், துன்பியல் காலப்பகுதியில் வழங்கப்பட்டுகின்ற உதவிகள் அரசியல் மயப்படாமலிருப்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். 

நன்றி 
எம். ஐ.லெப்பைத்தம்பி 
The Director, Thehotlinelk

No comments:

Post a Comment