சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாத அரசின் அலட்சியப்போக்கே கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்க காரணம் : ஐக்கிய தேசிய கட்சி குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 29, 2020

சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாத அரசின் அலட்சியப்போக்கே கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்க காரணம் : ஐக்கிய தேசிய கட்சி குற்றச்சாட்டு

(எம்.மனோசித்ரா) 

அரசாங்கமும் சுகாதார அமைச்சர் உள்ளிட்ட துறைசார்ந்தவர்கள் உரிய சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாது அவற்றை அலட்சியப்படுத்தி செயற்பட்டமையால் நாடு பாரதூரமான ஆபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. 

இன்று புதன்கிழமை அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனைத் தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசிய கட்சி அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது,

கொரோனா வைரஸ் விசேடமாக நாட்டின் பாதுகாப்புத் துறையினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தீவிரமாக பரவியுள்ளமை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளது. 

இம்மாதம் 18 ஆம் திகதி சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, 'நாட்டினுள் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்த முடியும்' என்றும் கூறினார். 

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் இவ்வாறான கருத்தினை முன்வைத்து பத்து நாட்களுக்குள் நாட்டில் 334 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 180 இக்கும் அதிகமான கடற்படையினர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றமையானது கவலைக்குரியதாகும். 

வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுப்பதோடு மக்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் சேவையில் ஈடுபட்டுள்ள முப்படையினரின் வாழ்க்கைக்கான பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட மோசமான வேலைத்திட்டங்கள் மற்றும் பொறுப்பற்ற செயற்திட்டங்கள் என்பவற்றால் அவர்களது வாழ்க்கை அபாய நிலைக்கு உள்ளாகியுள்ளது. 

பாரதூரமான பிரச்சினைகள் அனைத்துமே மிக மோசமானவையாகும். சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய சேவை என்பவற்றில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்காக பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுத்தல் மற்றும் தனியாள் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல் என்பவற்றை அதிகரிக்க வேண்டும். 

இம்மாதம் 5 ஆம் திகதி நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பி.சி.ஆர் பரிசோதனைகளை விஸ்தரிக்குமாறும் தனியாள் மருத்து உபகரணங்கள் உள்ளிட்ட ஏனைய மருத்துவ வசதிகளையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். 

இந்த கோரிக்கையை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட சுகாதாரத்துறை சார்ந்த அனைத்து தரப்புக்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன. சுகாதார அமைச்சர் மற்றும் சில அரச தரப்பினர் இது போன்ற கோரிக்கைகளை அலட்சியப்படுத்தியுள்ளனர். 

தேவையான பி.சி.ஆர் பிரிசோதனைகளை முன்னெடுப்பதற்காக அரசாங்கம் தனியார் வைத்தியசாலைகளை தொடர்புபடுத்திக் கொண்டு முறையான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அரசாங்கம் அதனை கவனத்தில் கொள்ளவில்லை. ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் ஒரு முறையும் பி.சி.ஆர் பரிசோதனைகளை நாளொன்றுக்கு 3000 ஆக அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்தது. 

தென் கொரியா, நியூசிலாந்து மற்றும் ஜேர்மன் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளமைக்கு காரணம் அந்நாடுகளில் நோயாளர்களை இனங்காணும் முறைமை விஸ்தரிக்கப்பட்டமையே ஆகும். 

தென் கொரியாவில் நாளொன்றுக்கு 12 000 தொடக்கம் 20000 வரையான அளவில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் இலங்கையில் தற்போது வரையும் நாளொன்றுக்கு சுமார் 1000 பரிசோதனைகளே முன்னெடுக்கப்படுகின்றன. 

நோயாளர்களை இனங்காண்பதற்காக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள செயற்திட்டங்களை மேலும் விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு சமூகத்தினுள் வைரஸ் பரவுவதையும் கட்டுப்படுத்த முடியாமல் போகும். 

எமது அத்தியாவசிய சேவைகள் மற்றும் விநியோக நடவடிக்கைகள் என்பவற்றில் ஈடுபடுபவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை போதுமானளவு பெற்றுக் கொடுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றது. 

நாட்டு மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கான சேவையில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் வீட்டினுள்ளிருக்கும் மக்களுக்காக அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அதற்காக சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய அரசாங்கம் ஆழமாகச் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment