அரசியலமைப்பு ரீதியான நெருக்கடியை தவிர்க்க சட்ட வியாக்கியானம் கோர தீர்மானம் : சுசில் பிரேமஜயந்த - News View

About Us

About Us

Breaking

Friday, April 3, 2020

அரசியலமைப்பு ரீதியான நெருக்கடியை தவிர்க்க சட்ட வியாக்கியானம் கோர தீர்மானம் : சுசில் பிரேமஜயந்த

(இராஜதுரை ஹஷான்) 

பொதுத் தேர்தல் மே மாதத்திற்குள் இடம்பெறாவிடின் நாட்டில் அரசியலமைப்பு ரீதியான நெருக்கடி ஏற்படும், இவ்விடயம் தொடர்பில் சட்டவியாக்கியானம் கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் மாற்றியமைப்பு, நடைமுறை தேர்தல் முறைமை திருத்தம், உள்ளிட்ட இரண்டு பிரதான விடயங்களுக்கு பலமான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி கடந்த பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் நடத்த விசேட வர்த்தமானியை வெளியிட்டார். 

பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் பகுதியளவில் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுத் தேர்தலை தேர்தல்கள் ஆணையாளர் பிற்போட்டார். 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் பல முன்னேற்றகரமான நடவடிக்கைகளை ஆரம்பத்தில் இருந்து முன்னெடுத்துள்ளது. 

மே மாதம் பொதுத் தேர்தலை நடத்தி ஜூன் மாதம் புதிய பாராளுமன்றத்தை கூட்ட எதிர்பார்க்கப்பட்டது. மே மாதம் பொதுத் தேர்தல் நடத்த முடியாவிட்டால் அரசியலமைப்பு ரீதியான நெருக்கடி ஏற்படும். 

இவ்விடயம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் சட்ட வியாக்கியானம் கோருமாறு தேர்தல் ஆணையகம் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆகவே தற்போதைய நிலையினை கருத்திற் கொண்டு சட்ட ஆலோசனை பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment