ஈரானில், கொரோனா வைரஸை குணப்படுத்தும் என்ற தவறான நம்பிக்கையில் அதிக செறிவுள்ள மதுவை குடித்து 600 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3,000 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் காரணமாக ஈரான் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாகும். இங்கு மது கொரோனா வைரஸை குணப்படுத்தும் என்ற வதந்தி பரவியதையடுத்து ஆயிரக்காணகானவர்கள் அதிக செறிவுள்ள ஆல்கஹாலை குடித்து வருகின்றனர்.
இதன் விளைவாக 600 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதுடன், 3,000 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ஈரானிய நீதித்துறை செய்தித் தொடர்பாளர் கோலம் ஹொசைன் எஸ்மெய்லி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறு செயற்பட்ட ஏராளமாவர்களை கைது செய்துள்ளதாகவும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸ் காரணமாக ஈரானில், 3,872 இறப்புகள் பதிவாகியுள்ளதுடன், 62,589 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment