பேலியகொடை மீன் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்ட ஊடக அறிவித்தலிலேயே இவ்வா தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேலியகொடை மீன் சந்தையில் 529 பேரிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட PCR சோதனைகளில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பேலியகொடை மீன் சந்தைக்கு வரும், பிலியந்தலையைச் சேர்ந்த மீன் வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, பேலியகொடை மீன் சந்தை மூடப்பட்டதோடு, அங்குள்ள 529 பேரின் மாதிரி எடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் வெலிசறை கடற்படை முகாம் ஆகியவற்றிலிருந்து அதிகளவான வைரஸ் தொற்றைக் கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டமையானது, சமூகத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட அனைவரினதும் தொற்று ஏற்பட்ட விதம் தொடர்பான வரலாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், அது நடைமுறை சாத்தியமான காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக கொரோனா தொற்று நோயாளர்களை அதிக அளவில் அடையாளம் காண முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக நேற்றையதினம் (23) மாத்திரம் 1142 பிசிஆர் (PCR) சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன இது, இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிக அதிகளவான சோதனையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆரம்ப கட்டத்தில் மிகவும் குறைந்தளவான பிசிஆர் சோதனைகளே மேற்கொள்ளப்பட்டதாகவும் கடந்த வாரமளவில் அது 531 ஆக அதிகரிக்கப்படட்டதோடு, இவ்வாரம் அதனை 730 ஆக அதிகரிக்கவும் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
இன்று (24) நாடு முழுவதிலுமுள்ள அனைத்து PCR பரிசோதனை கூடங்களையும் இணைத்து விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதோடு ஒரு சில ஆய்வுக்கூடங்களில் பிசிஆர் பரிசோதனை இயந்திரங்களை மேலும் அதிகரிப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (23) தனியார் வைத்தியசாலைகளின் பிரதிநிதிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலுக்கு அமைய, சுகாதார அமைச்சினால் தேசிய ரீதியில் வழங்கப்படும் மாதிரிகளை பரிசோதிப்பதற்கு அவர்களின் உதவியை பெறுவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவை அனைத்தும் இலங்கையில் மிக உயர்ந்த அளவில் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நோக்கமாகும் என விசேட வைத்திய நிபுணர் அணில் ஜாதக தெரிவித்தார்
No comments:
Post a Comment