தமது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் உதயன் பத்திரிகை மீது 100 கோடி ரூபா இழப்பீடு கோரி தமது சட்டத்தரணியூடாக அறிவித்தல் அனுப்பியுள்ளார்.
அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணத்துடன் தொடர்புபடுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மீது உண்மைக்கு புறம்பான செய்தியினை வௌியிட்டமை தொடர்பிலேயே இழப்பீடு கோரப்பட்டுள்ளது என்ற விடயம் தொடர்பாக அங்கஜன் இராமநாதன் அவர்களது சட்டத்தரணி ஸ்ரனிஸ்லாஸ் செலஸ்ரின் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை யாழ். ஊடக அமையத்தில் நேற்று (23) நடாத்தினார்.
அதில் அவர் குறிப்பிட்ட விடயம் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணத்துடன் தொடர்புபடுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மீது உண்மைக்கு புறம்பான செய்தியினை வௌியிட்டமை தொடர்பிலேயே இழப்பீடு கோரப்பட்டுள்ளது.
உதயன் பத்திரிகையின் உரிமையாளர் தேர்தலில் ஒரு வேட்பாளராக களமிறங்கும் நிலையில் எதிர்த்தரப்பு வேட்பாளராக அங்கஜன் இராமாநான் உள்ளமையினால் அவருக்கு எதிரான தாக்கத்தை ஏற்படுத்தவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டு கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த பத்திரிகையின் செய்திகளை புகைப்படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்புவதற்கு திட்டமிட்ட வகையில் குறித்த பத்திரிகையின் உரிமையாளர் செயற்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் உதயன் பத்திரிகை எவ்வித ஆதாரமுமின்றி அடிப்படையின்றி உண்மைக்கு புறம்பான செய்திகளை வௌியிட்டு தேர்தலுக்கான கபட நோக்கத்தில் அவதூறு ஏற்படுத்துவதாக அந்த இழப்பீட்டு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இந்த தேர்தல் காலப்பகுதியை பயன்படுத்தி தமது கட்சிக்காரருக்கு வௌிநாட்டிலும் உள்நாட்டிலும் உள்ள நன்மதிப்புக்கு குந்தகம் ஏற்படுத்துவதே குறித்த பத்திரிகை பிரசுரித்த செய்தியின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட காரணங்களால் குறித்த பத்திரிகை மீது நட்டஈடு வழக்குத் தொடர வழக்கெழு காரணம் எழுந்துள்ளதாக அங்கஜன் இராமநாதனின் சட்டத்தரணி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் 14 நாட்களிற்குள் தமது கட்சிக்காரருக்கு 100 கோடி ரூபா நட்டஈடு வழங்கத் தவறும் பட்சத்தில் குறித்த பத்திரிகையின் உரிமையாளர் மீது சட்டநடவடிக்கையெடுக்கவுள்ளதாக அங்கஜன் இராமநாதனின் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் தமது கட்சிக்காரருக்கு எதிராக கூற்றுக்களையோ அல்லது அவதூறு கருத்துக்களையோ கூறக்கூடாது என மேலதிக கோரிக்கையும் அந்த கடிதத்தில் முன்வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்கதட்டத்தக்கது.
அந்த கடிதத்தில் உள்ள விடயங்கள் பின்வருமாறு
அன்புடையீர் ஒரு பில்லியன் (ஆயிரம் மில்லியன்) இழப்பீடு கோரி கோரிக்கை கடிதம்
இல - 185, கோவில் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியை சேர்ந்த எனது கட்சிக்காரரான அங்கஜன் இராமநாதன் அவர்கள் எனக்கு அளித்த அறிவுறுத்தலிற்கமைய நான் தங்களிற்கு வரையும் கோரிக்கை கடிதம் யாதெனில், எனது கட்சிக்காரர் ஓர் அரசியல்வாதி என்பதுடன் அவர் 2013ம் ஆண்டில் வட மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு வட மாகாண சபை உறுப்பினராக தெரிவானார்.
பின்னர் 2015ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு, கணிசமான வாக்குகளை பெற்றதை தொடர்ந்து, ஐக்கிய மக்கள் தேசிய கூட்டமைப்பின் (UPFA) தேசியப்பட்டியல் உறுப்பினராக இலங்கை நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.
பின்னர் அவ்வாறு சில வருடங்கள் அரசியலில் அப்பழுக்கற்ற சேவையாற்றியதை தொடர்ந்து 2018ம் ஆண்டு யூன் மாதம் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் அமைச்சரவையில் துணை விவசாய அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
இதன்பின்னர், கடந்த பாராளுமன்றம் கலைக்கப்படும் வரையில், இப்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் வழிநடத்தலில் எனது கட்சிக்காரர் மிகப்பொறுப்பு வாய்ந்த யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அத்துடன் அவர் சிறீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளராகவும், யாழ் மாவட்ட தலைவராகவும், அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் பதவிகளையும் வகித்திருந்தார் என்பதுடன் இவ்வாறான அர்ப்பணிப்புள்ள, அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக எனது கட்சிக்காரர் இருக்கும் நிலையில், உங்களது உதயன் பத்திரிக்கையின் (20.04.2020)ம் திகதிய பதிப்பில் பின்வருமாறான வார்த்தைகளை கொண்டு, பின்வருமாறு தலைப்பிட்டு, முதற்பக்கத்தில் முதன்மைச் செய்திகளாக இரு செய்தியை பிரசுரித்துள்ளீர்கள் என எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
01. கொடையாளர்களின் நிவாரணத்தை "ஆட்டையை போட்ட அரசியல்வாதி” கச்சேரியில் இருந்து பொருட்களை களவாடும் கீழ்தர அரசியல் அம்பலம்.
02. “கொடையாளர் நிவாரணத்தை அவர்களிடம் அனுப்புங்கள்” மாவட்ட செயலர் பணிப்பு - சாடுகிறார் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் கூல்ஷ
பாராளுமன்ற தேர்தல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு, தேர்தல் நடைபெற வேண்டி உள்ள நிலையில், உங்கள் பத்திரிக்கையின் பங்குதாரர் எனக் கூறப்படும் ஈஸ்வரபாதம் சரவணபவன் என்பவரும் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திகளை விசமத்தனமான முறையில் பொய்யாகவும் எனது கட்சிக்காரரின் அபரிதமான செல்வாக்கை சரிக்கும் வகையிலும், தேர்தல் நடைபெற்றால் அதன் முடிவுகளில் எனது கட்சிக்காரரிற்கு எதிரான தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவும் மேற்படி இவ் இரு செய்திகளையும் பிரசுரித்தது மட்டுமில்லாமல் இதனை Screenshot எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பரவ ஊக்கம் கொடுத்துள்ளீர்கள்” என நான் அறிவுறுத்தப்பட்டுள்ளேன்.
உங்கள் பத்திரிக்கையில் வெளிவந்த உண்மைக்கு புறம்பான இச் செய்திகளை ஆயிரக்கணக்கான மக்கள் வாங்கி வாசித்துள்ளார்கள் என்பதுடன் இவை இணையத்தளத்திலும் வெளியாகியதால் வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் மேலும் பல்லாயிரக்கணக்கான மக்களால் குறித்த செய்திகள் வாசிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ் உண்மைக்கு புறம்பான இரு செய்திகளிற்கும் அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டது என்பதுடன் சமூக கண்ணோட்ட பரப்பிலும் இவை அதிக தாக்கத்தை ஏற்படுத்திப் பரவச் செய்யப்பட்டுள்ளது.
“அரச சொத்துக்களை களவாடினர்” என அர்த்தப்ப 01.“கொடையாளர்களின் நிவாரணத்தை ஆட்டையை போட்ட அரசியல்வாதி கச்சேரியில் இருந்து பொருட்களை களவாடும் கீழ்தர அரசியல் அம்பலம்” என தலைப்பு செய்தியாகவும் அதனுடன் சேர்த்து அதே முன்பக்கத்தில் அதேயளவு முக்கியத்துவம் கொடுத்து
02. கொடையாளர் நிவாரணத்தை அங்கஜனிற்கு அனுப்புங்கள் மாவட்ட செயலர் பணிப்பு - சாடுகிறார் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் கூல்? என முன்பக்க தலைப்பில் என கட்சிக்காரரை ஜயம் திரிபுர சுட்டிக்காட்டும் செய்திகளை வெளியிட்டுள்ளீர்கள்.
மேற்கூறிய இரு செய்திகளில் வந்த தலைப்புக்களும் அதில் கூறப்பட்ட செய்திகளும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை, அடிப்படையற்றவை, தீங்கான எண்ணத்துடன் புனையப்பட்டவை என்பதுடன் எனது கட்சிக்காரரை அவதூற்றுக்குள்ளாக்கி மானநஷ்டத்தை ஏற்படுத்துபவையுமாகும் என எனது கட்சிக்காரர் அறிவுறுத்தியுள்ளார்.
எனது கட்சிக்காரர் கடந்த பல வருடங்களாக அரசியல் பணி செய்து வருபவர் என்பதுடன் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர், விவசாய பிரதி அமைச்சர் போன்ற பல பொறுப்பு வாய்ந்த பதவிகளையும் வகித்து மக்களிற்கு அரும்பணி சேவையாற்றியவர் என்பதையும் தாங்கள் அறிவீர்கள்.
தங்கள் பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்ட இச் செய்திகளில் தாங்கள் பயன்படுத்திய சொற்கள் தவறாகவும், சட்டமுறையற்ற ரீதியிலும், நியாயமற்ற விதமாகவும், எனது கட்சிக்காரரிற்கு. களங்கத்தையும் அவரின் நற்பெயரிற்கு இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்பதுடன் அவரின் புகழிற்கு கேலியையும் அவமரியாதையும் உண்டாக்கியுள்ளது.
மேற்கூறிய தங்கள் இரு தலைப்பு செய்திகளும் எனது கட்சிக்காரரை அவதூற்றுக்குள்ளாகியுள்ளது என்பதுடன் இலங்கை மற்றும் வெளிநாட்டு மக்கள் மத்தியில் அவரிற்கு இருந்த மரியாதையையும் நல்லெண்ணத்தையும் குலைக்கும் விதமான ஓர் தோற்றப்பாட்டை சமூகத்தில் உருவாக்கியுள்ளது.
எனது கட்சிக்காரர் கடந்த 10 வருடங்களாக தனது இடைவிடாத அரசியல் பணிகள் மூலம் பெற்றுக்கொண்ட நேர்மை, நம்பிக்கை, மக்கள் செல்வாக்கு, மதிப்பு என்பவற்றின் மீது தங்களின் மேற்படி செய்திகள் நேரடியான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் எனது கட்சிக்காரரும் போட்டியிடுவததன் காரணமாக தேர்தல் முடிவுகளில் எனது கட்சிக்காரரிற்கு எதிரான முறையில், தேர்தலில் எதிரான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மேற்படி செய்திகள் கபடமான எண்ணத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ளன என எனது கட்சிக்காரர் எனக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேற்கூறிய சந்தாப்பம், சூழ்நிலைகளில் ஆயிரம் மில்லியன் ரூபா உங்களிடம் இருந்து நட்ட ஈடாக கோரி வழக்கு தொடர எனது கட்சிக்காரரிற்கு வழக்கெழு காரணம் எழுந்துள்ளது. ஆகையால், குறித்த ஆயிரம் மில்லியன் ரூபா (1,000,000,000/-) பணத்தினை மொத்தமாக இன்றிலிருந்து 14 நாட்களிற்குள் எனது கட்சிக்காரரிற்கு
செலுத்தி விடுமாறு இத்தால் தங்களிற்கு கோரிக்கை விடப்படுகிறது.
மேலும் இனிமேற்கொண்டு எனது கட்சிக்காரரிற்கு எதிராக அவதூறான கருத்துக்களையோ அல்லது கூற்றுக்களையோ தங்கள் பத்திரிக்கையில் வெளியிடாமல் இருக்க வேண்டும் எனவும் மேலதிக கோரிக்கை இத்தால் விடப்படுகிறது.
இக் கோரிக்கை கடிதத்திற்கு அமைவாக தாங்கள் இன்றிலிருந்து 14 நாட்களிற்குள் ஆயிரம் மில்லியன் ரூபா பணத்தினை எனது கட்சிக்காரரிற்கு செலுத்தி ஒழுகத் தவறும் பட்சத்தில் தங்கள் பத்திரிக்கையில் வெளியாகிய மேற்கூறிய இரு அவதாறு செய்திகளின் அடிப்படையில் தங்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தங்களிற்கு அறிவிக்குமாறு நான் அறிவுறுத்தப்பட்டுள்ளேன்.
அவ்வாறான, சந்தரப்பத்தில் தகுந்த நீதிமன்றிடம் இருந்து தடை உத்தரவு, நிவாரணம் ஆயிரம் மில்லியன் ரூபா இழப்பீடு உட்பட பொருத்தமான நிவாரணங்களை கோரி வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதையும் நான் தங்களிற்கு அறியத்தருகின்றேன்.
No comments:
Post a Comment