இந்தியாவிடமிருந்து 400 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப்பெற அரசாங்கம் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 23, 2020

இந்தியாவிடமிருந்து 400 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப்பெற அரசாங்கம் தீர்மானம்

(ஆர்.யசி) 

நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு குறுகியகால கடனாக இந்தியாவிடம் இருந்து 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் அதற்கான உடன்படிக்கையை செய்துகொள்ள அமைச்சரவை அனுமதியும் பிரதமரினால் பெறப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட போதே இதனைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்னர் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி இப்போது பதிவாகியுள்ளது. சகல நாடுகளின் பொருளாதாரத்திலும் இது தாக்கத்தை செலுத்தியுள்ளதுடன் ஏற்றுமதி, இறக்குமதி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள காரணிகளை கருத்தில் கொண்டு சகல நாடுகளின் ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சி கண்டுள்ளது. 

ஒரு நாட்டுக்கு மட்டும் தீர்வு காணக்கூடிய சூழல் இல்லாத நிலைமையே உருவாகியுள்ளது. எமது நாட்டினை எடுத்துக் கொண்டாலும் சுற்றுலாத்துறை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. பிரதான ஏற்றுமதிகளின் கேள்வி குறைந்துள்ளதால் சாதரணமாக எமக்கு வரக்கூடிய ஏற்றுமதி வருமானம் குறைவடைந்துள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள காரணத்தினால் அதன் மூலமாக கிடைக்கும் வருமானமும் வீழ்ச்சி கண்டுள்ளது. 

நாட்டில் இருந்து வெளியேறும் நிதியை தடுக்கும் விதத்தில் அரசாங்கம் பல தீர்மானங்களை முன்னெடுத்துள்ளது. அனாவசியமான இறக்குமதிகள், சொகுசு பொருட்களின் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது. ஏனைய இறக்குமதிகளுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய உற்பத்தியை பலப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

ஆகவே இந்நிலையில் குறுகியகால தேவையை கருத்தில் கொண்டு 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணத்தை நாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் சார்க் நாடுகளின் அனுமதியுடன் இந்தியாவிடம் இருந்து குறுகியகால கடன் தொகையை பெற்றுக்கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இது குறித்து உடன்படிக்கை ஒன்றினை செய்துகொள்ள அமைச்சரவையில் பத்திரமொன்று முன்வைத்துள்ள நிலையில் அதற்கான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. 

அத்துடன் ஏற்றுமதியை மீண்டும் ஸ்த்திரப்படுத்தும் விதத்தில் ஏற்றுமதி தொழிற்சாலைகளின் வேலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சுகாதார அதிகாரிகளின் முழுமையான ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு பாதுகாப்பை உறுதிபடுத்த செய்ய வேண்டிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதுடன் ஊழியர்களை பாதுகாப்பாக பயன்படுத்தி எமது செயற்பாடுகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் தேசிய இறக்குமதியாளர்கள் இப்போது பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் அவர்கள் நிதி அமைச்சில் முறைப்பாடு செய்ய முடியும். அவர்களின் நெருக்கடிகளுக்கு தீர்வுகளை வழங்க முடியும் என்றார். 

No comments:

Post a Comment