இலங்கையில் பதிவான கொரோனா வைரஸ் தொற்றின் 3 ஆவது மரணத்தையடுத்து அதிரடி நடவடிக்கைகள் - இதோ முழு விபரங்கள் ! - News View

About Us

About Us

Breaking

Thursday, April 2, 2020

இலங்கையில் பதிவான கொரோனா வைரஸ் தொற்றின் 3 ஆவது மரணத்தையடுத்து அதிரடி நடவடிக்கைகள் - இதோ முழு விபரங்கள் !

(எம்.எப்.எம்.பஸீர்) 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் பதிவான மூன்றாவது மரணத்தை அடுத்து, கொழும்பு மத்தி பொலிஸ் வலயத்தின் மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இமாமுல் அரூஸ் மாவத்தையும் முற்றாக முடக்கப்பட்டுள்ளது. 

குறித்த பகுதிக்குள் உள் நுழையவோ அல்லது அங்கிருந்து வெளியேருவதோ தடுக்கப்பட்டு பொலிஸ், அதிரடிப்படை மற்றும் இராணுவ பாதுகப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

கொரோனாவால் இலங்கையில் பதிவான 3 ஆவது மரணத்துக்கு உரியவர், மருதானை இமாமுல் அரூஸ் மாவத்தையை வசிப்பிடமாக கொண்டவர் என்ற காரணத்தை அடிப்படையாகக் கொண்டு அந்த பகுதி முடக்கப்பட்டது. 

இந்நிலையில் அப்பகுதியில் குறித்த மரணித்த நபருடன் நெருங்கிய தொடர்பாடல்களைக் கொண்டிருந்த 300 பேரை அடையாளம் கண்ட சுகாதார மற்றும் பாதுகாப்புத் தரப்பு அவர்களை மட்டக்களப்பு, புனானை தனிமைப்படுத்தல் மையத்துக்கு, தொற்று நீக்கல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக அழைத்துச் சென்றதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவர் இராணுவ தளப்தி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார். 

இவர்கள் இன்று மாலை மருதானையில் இருந்து இரானுவத்தின் விஷேட பஸ் வண்டிகளில் இவ்வாறு மட்டக்களப்பு நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர். 

அத்துடன் அந்த பகுதியில் பல தொடர்மாடிகள் மற்றும் வீடுகளில் வசிக்கும் 220 குடும்பங்களைச் சேர்ந்த 1400 பேரை அவரவர் வீடுகளுக்குள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்தார். 

நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 73 வயதான மருதானை பகுதியைச் சேர்ந்த நபர், ஸ்ரீ ஜயவர்தன புர வைத்தியசாலையில் இருந்து அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்படும் போது உயிரிழந்திருந்தார். 

இதனையடுத்து சுகாதாரத் துறையும் பாதுகாப்புத் துறையும் உளவுத் துறையும் இணைந்து அவர் தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுத்தனர். 
இதன்போது குறித்த வயோதிபர், சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 10 நாட்கள் சிகிச்சை பெற்றுள்ளதும் அதன் பின்னர் கடந்த மார்ச் 20 ஆம் திகதி கொழும்பு பகுதியின் பிரபல மருந்தகம் ஒன்றில் மருந்து பெற்றுக்கொண்டுள்ளமையும் பின்னர் நோய் உச்சத்தை அடைந்த நிலையில் மார்ச் 31 ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. 

அத்துடன் அந்நபர் நோய் வாய்ப்பட்டிருந்த காலப்பகுதியில் அவரைப் பார்க்க அப்பகுதியில் உள்ளோர் அங்கு வந்து சென்றுள்ளமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து உடன் நடவடிக்கை எடுத்த சுகாதார பிரிவினர், உடனடியாக நேற்று இரவோடிரவாக மருதானையில் குறித்த வயோதிபர் வீட்டில் வசித்த அவரது மகள், மருமகன் மற்றும் இரு பேரப்பிள்ளைகளை அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலைக்கு பரிசோதனைகளுக்காக அழைத்துச் சென்றனர். 

இந்நிலையில் அதில் மருமகனுக்கும், ஒரு பேரனுக்கும் கொரோனா வைரஸ் தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மகளும், மற்றைய பேரப் பிள்ளையும் புத்தளம், சாஹிரா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தொற்று நீக்கல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

இதனையடுத்தே மருதானையின் குறித்த இமாமுல் அரூஸ் மாவத்தை பகுதியை முற்றாக முடக்க சுகாதார தரப்பும் பாதுகாப்புத் தரப்பும் நடவடிக்கை எடுத்தன. 

இதனைவிட மரணித்த வயோதிபரின் மகன் அண்மையில் வெளிநாட்டில் இருந்துவிட்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் வசித்த வெல்லம்பிட்டி பகுதி வீட்டில் இருந்தோரும், மேலும் கிராண்ட்பாஸ் பகுதியில் வசித்த உறவினர்கள் சிலரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 
இவ்வாறான பின்னணியில் இன்று நண்பகல், 3 ஆவது கோரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவரின் இறுதிக் கிரியைகள் முல்லேரியா - கொட்டிகாவத்த பொது மயானத்தில் நடாத்தப்பட்டன. 

இதன்போது சட்ட வைத்திய அதிகாரி, மரணித்தவரின் மகனிடம் பெற்றுக் கொண்ட விருப்பத்துக்கு அமைய, சடலமானது (ஜனாஸா) தகனம் செய்யப்பட்டது. 

இதன்போது சட்ட வைத்திய அதிகாரி விருப்பம் கோரிய போது, நடை முறையில் உள்ள சுற்று நிரூபம் மற்றும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் தகனம் செய்ய இணங்குவதாக மகன் தெரிவித்திருந்தார். 

இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் அதிகமாக கொழும்பிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 35 ஆகும். 

இதில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 14 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனை தவிர பத்தரமுல்லையில் இருவர், பொரலகஸ்கமுவை, கொத்தட்டுவ பகுதிகளில் தலா ஒருவர், கொலன்னாவையில் மூவர் மஹரகமவில் இருவர், நுகேகொடையில் நால்வர் இரத்மலானையில் நால்வர் மற்றும் தெஹிவளையில் ஐவர் என தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment