கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள பழுதடையக் கூடிய அத்தியாவசியப் பொருட்களுடன் 20 ஆயிரம் கொள்கலன்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, April 3, 2020

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள பழுதடையக் கூடிய அத்தியாவசியப் பொருட்களுடன் 20 ஆயிரம் கொள்கலன்கள்

(ஆர்.யசி) 

'கொவிட்-19" கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் நிலைமைகளை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள நாடளாவிய ரீதியிலான ஊரடங்குச் சட்டத்தின் காரணமாக பழுதடையக்கூடிய பொருட்கள் மற்றும் பிற பொருட்களுடன் 20,000 க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவிக்கின்றது. 

ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்துள்ள காரணத்தினால் கொழும்பு துறைமுகத்தில் நாளாந்த வேளைகளில் ஈடுபடக்கூடிய ஊழியர்கள் இல்லாத காரணத்தினால் கடந்த தினங்களில் கொழும்பிற்கு கப்பல்கள் மூலமாக கொண்டுவரப்பட்ட கொள்கலன்களை திறந்து பார்க்க முடியாதுள்ளதாகவும், அவற்றில் கொண்டுவரப்பட்டுள்ள பொருட்கள் பழுதடையக்கூடிய நிலையில் மற்றும் பாவனைக்கு பெற்றுக் கொள்ளாத நிலைமையில் இருப்பதாகவும் கூறும் இலங்கை சுங்கம், அவ்வாறான 20 ஆயிரம் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளது. 

இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ள கொள்கலன்களில் அதிகமாக பழுதடையக் கூடிய பொருட்களான வெங்காயம், சர்க்கரை, உருளைக் கிழங்கு, பருப்பு மற்றும் டின்மீன் ஆகியவை இருப்பதாகவும், இறக்குமதியாளர்கள் இவற்றை கொள்வனவு செய்ய முடியாதிருக்க தற்போதுள்ள அசாதாரண சூழலில் வங்கிகள் உரிய முறையில் செயற்படாது இருப்பதுமே காரணம் எனவும் சுங்கம் சுட்டிக் காட்டுகின்றது. 

கைமாற்றப்படும் கொள்கலன்கள் அதிகளவில் கொழும்பு துறைமுகத்தில் இருக்கின்றமையும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த கால எல்லைக்குள் குறைந்த பட்சம் 30 ஆயிரம் கொள்கலன்களையேனும் ஏற்றுமதி செய்திருக்க வேண்டும், எனினும் இந்தியா போன்ற நாடுகள் தமது துறைமுகங்கள் அனைத்தையும் பூட்டியுள்ள காரணத்தினால் எந்த கொள்கலன்களையும் நகர்த்த முடியாத சூழ்நிலை உருவாக்கியுள்ளது எனவும் இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment