மேல் மாகாணத்தில் நிர்க்கதி நிலைக்கு உள்ளாகி இருக்கும் சுமார் 200 பேருக்கு முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவால் மனிதாபிமான உதவிகள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 15, 2020

மேல் மாகாணத்தில் நிர்க்கதி நிலைக்கு உள்ளாகி இருக்கும் சுமார் 200 பேருக்கு முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவால் மனிதாபிமான உதவிகள்

மேல் மாகாணத்தில் நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள்ள மட்டக்களப்பு மாவட்டம் உட்பட கிழக்கை மாகாணத்தைச்சேர்ந்த சுமார் 200 பேருக்கு உலருணவுப்பொதிகள் நேற்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மெளலானா அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினைக்கட்டுப்படுத்துமுகமாக அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பயணத்தடை மற்றும் தொடர் ஊரடங்குச்சட்டம் காரணமாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா உட்பட்ட மேல் மாகாணத்திலும், வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உட்பட்ட பகுதிகளில் தொழில் நிமித்தமும் இதர காரணங்களுக்காகவும் சென்று நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள்ள பல நூற்றுக்கணக்கான மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை அழைத்து வரவும் அவர்களின் நலனோம்பு விடயங்களிலும் அவர்களைச்சொந்த இடங்களுக்கு அழைத்து வருவதற்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மெளலானா பல்வேறு முன்னெடுப்புக்கள் மேற்கொண்டு வருகின்றார்.

இது இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், அரசின் இறுக்கமான நடைமுறைகளாலும், ஏனைய மக்களது நலன்களையும் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு தற்காலிகமாக குறித்த முயற்சிகள் பிற்போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதிகளில் அடைபட்டுள்ள மக்கள் ஊரடங்கு அமுலிலுள்ளதனால் அன்றாடத்தேவைகளை நிவர்த்தி செய்வதில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.
இவ்வாறானவர்களது விபரங்களைத் திரட்டிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா, பிராந்திய ஆளுநர்கள் மற்றும் அரசாங்க அதிபர்களைத்தொடர்பு கொண்டு குறித்த நபர்களது விபரங்களை வழங்கி அடிப்படை உணவு மற்றும் சுகாதார வசதிகளை ஏற்பாடு செய்து வழங்கியதுடன், கொழும்பிலுள்ளவர்களில் பலருக்கு நேரடியாக உணவு உட்பட்ட அடிப்படைத்தேவைகளை இயலுமான வரை வழங்கி வந்தார்கள்.

அந்த வகையில், நிர்க்கதி நிலையில் மேல் மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் அல்லற்படும் கிழக்கைச்சேர்ந்த சுமார் 200 பேருக்கு நேற்றைய தினம் அரிசி, கோதுமை, பால்மா, சீனி, பருப்பு அடங்கலாக அடிப்படை உணவுத்தேவையைப்பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான உலருணவுப்பொதிகளை அவர்கள் தற்போது தங்கியுள்ள இடங்களுக்கே நேரடியாகச்சென்று விநியோகம் செய்தார்.

தமக்கான வருமானங்களற்ற நிலையில், தொடர் முடக்கம் காரணமாக தமது உணவுத்தேவையப் பூர்த்தி செய்வதற்கு வாய்ப்புக்களற்ற நிலையில் மிகவும் சிரமத்துடன் தமது அன்றாட வாழ்வினை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு அலி ஸாஹிர் மௌலானாவின் குறித்த செயற்பாடு ஓரளவு நிம்மதியையும் நம்பிக்கையையும் வழங்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment