எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா நோயாளியொருவர் அடையாளம் காணப்படுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கே.கலாரஞ்சனி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று (17.03.2020) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தின் போது அவர் மேற் கண்டவாறு கூறினார்.
அடையாளப்படுத்தப்பட்ட குறித்த நோயாளியை ஐ.டி.எச் எனப்படும் தொற்று நோய் தடுப்பு மருத்துவ பிரிவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள கூழ்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக இக்கூட்டம் கூட்டப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கே.கலாரஞ்சனி, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந், மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.குமாரசிறி, மட்டக்களப்பு போதனா வைத்தியாசலையின் வைத்திய நிபுணர் டாக்டர் மதனழகன், பொது வைத்திய நிபுனர் டாக்டர் சுந்தரேசன் உட்பட சுகாதார துறை அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள், சர்வமத பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கே.கலாரஞ்சனி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா சந்தேகத்துக்கிடமான நான்கு நோயாளர்கள் உள்ளார்கள். அவர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்று தெரிந்தவுடன் அவர்களை விடுவித்து விட்டோம்.
ஒருவருக்கு கொரோனா அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மற்றொருவரின் இரத்த மாதரிகளை எடுத்து கண்டி தேசிய வைத்தியசாலைக்கு நாங்கள் பரிசோதனைக்கான அனுப்பியிருக்கின்றோம்.
கொரோனா அடையாளப்படுத்தப்பட்டுள்ள அந்த நோயாளியை ஐ.டி.எச் எனப்படும் கொழும்பிலுள்ள தொற்றுநோய் தடுப்பு மருத்துவ பிரிவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற் கொண்டுள்ளோம்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா பிரிவொன்றினை அமைத்திருந்தோம். ஆறு கட்டில்களைக் கொண்டு அந்த பிரவு அமைக்கப்பட்டுள்ளது.
அதனைச் சுற்றி 54 கட்டில்களைக் கொண்ட ஒரு இடமும் சந்தேகத்துக்கிடமாக உள்ளது. அங்கு வரும் நோயாளர்களை அந்த இடத்தில் வைத்து சிகிச்சையளிப்பதற்கும் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக அந்தப்பிரிவு அமைந்துள்ளது.
எமது வைத்தியசாலையில் கொரோனா பற்றிய நிலைமையை எவ்வாறு கண்டிடறிய வேண்டும் என்ற அறிவுறுத்தலை போட்டுள்ளோம்.
விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் பிரித்தறிவதற்கான ஒரு இடத்தினை அமைத்துள்ளோம். இடத்திற்கு இது தொடர்பாக பரிசோதனைகளை மேற்கொண்டு அவ்வாறு உள்ளவர்களை தனியான வேறு வழியினூடாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லும் இடத்திற்கு கொண்டு செல்கின்றோம்.
இந்த நடவடிக்கைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியாசலைக்கு மருருத்துவர்கள் தாதியர்கள் தேவையாக இருக்கின்றது. ஆவைகளை பெற்றுக் கொள்வதற்காக சுகாதார அமைச்சுடன் பேசி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
எமது வைத்தியசாலையிலும் இதற்கான செயலணியொன்றை அமைத்துள்ளோம். அதன் தலைவியாக நானும் வைத்திய நிபுணர் மதனழகன் மற்றும் டாக்டர் வைதேகி உட்பட வைத்திய நிபுணர்கள் உட்பட இன்னும் சில உத்தியோகத்தர்களும் இருக்கின்றார்கள். இதன் மூலமாக இதனை எப்படி முகாமைத்துவம் செய்வது என்று நாங்கள் திட்டமிட்டு செய்து வருகின்றோம் என்றார்.
இந்தக் கூட்டத்தில் கொரோனா தொடர்பிலான மட்டக்களப்பு மாவட்ட செயலணியொன்றும் அமைக்கப்பட்டது.
இதன் தலைவியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவும் உறுப்பினர்களாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மட்டக்களப்பு போதனா வைத்தியாசலையின் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் உட்பட பலரும் அடங்குகின்றனர்.
இதன் போது மக்களை விழிப்பூட்டுவதற்கான செயற்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.
No comments:
Post a Comment