சமுர்த்தி பயனாளிகளுக்கான கடனை நிவாரண உதவியாக வழங்க வேண்டும், நாட் சம்பள குடும்பங்களுக்கு இதுவரை எந்த நிவாரணமும் இல்லை - ஹர்ஷன ராஜ கருணா - News View

About Us

About Us

Breaking

Monday, March 30, 2020

சமுர்த்தி பயனாளிகளுக்கான கடனை நிவாரண உதவியாக வழங்க வேண்டும், நாட் சம்பள குடும்பங்களுக்கு இதுவரை எந்த நிவாரணமும் இல்லை - ஹர்ஷன ராஜ கருணா

சமுர்த்தி பயனாளிகளுக்கு அரசாங்கம் வழங்குவதாக தெரிவித்திருக்கும் பத்தாயிரம் ரூபா கடனை நிவாரண உதவியாக வழங்க வேண்டும். அத்துடன் நாட் சம்பளத்தில் வாழும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் இதுவரை எந்த நிவாரணமும் வழங்காமல் இருப்பது கவலையளிக்கின்றது என கம்பஹா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜ கருணா தெரிவித்தார். 

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கான பத்தாயிரம் ரூபா கடன் வசதி தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு சமுர்த்தி பயனாளிகளுக்கு பத்தாயிரம் ரூபா கடன் வசதி வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. குறித்த கடன் வசதி இதுவரை இலட்சக்கணக்கான சமுர்த்தி பயனாளிகளுக்கு கிடைக்காமல் இருக்கின்றது. 

குறிப்பாக கம்பஹா மாவட்டத்தில் இந்த கடன் உதவியை இதுவரை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பவர்களின் முறைப்பாட்டுக்கமைய கம்பஹா மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி, அதனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றேன். 

கம்பஹா மாவட்டத்தில் சுமுர்த்தி பயனாளிகள் யாரேனும் இதுவரை பத்தாயிரம் ரூபா கடன் வசதியை பெற்றுக் கொள்ள முடியாமல் இருந்தால் அவர்கள் அரசாங்க அதிபர் காரியாலயத்தின் 033 2223723 என்ற இலக்கத்துடன் பணிப்பாளரை தொடர்புகொண்டு முறையிடலாம். 

அத்துடன் மக்கள் எதிர்நோக்கும் கஷ்ட நிலையை கருத்திற்கொண்டு சமுர்த்தி பயனாளிகளுக்கு அரசாங்கம் அறிவித்திருக்கும் இந்த பத்தாயிரம் ரூபா கடனை நிவாரண உதவியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றேன். 

அதேபோன்று நாட்சம்பளத்துக்கு தொழில் செய்துவரும் பலர் எமது நாட்டில் இருக்கின்றனர். அவர்கள் அன்றாடம் உணவுக்கும் கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லாமல் இருக்கின்றது. 

கூலித் தொழில் செய்து வாழ்வாதாரத்தை தேடிக்கொண்டு வருபவர்களுக்கு அரசாங்கம் உடனடியாக நிவாரண வசதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். 

அத்துடன் அரசாங்கம் பிரதேச சபை மற்றும் கிராம சேவகர் ஊடாக நிவாரண பொதிகளை பணத்துக்கு வழங்கி வருகின்றது. அரசாங்கத்தின் இந்த நிவாரண பொதிகளை பணம் உள்ளவர்கள் பெற்றுக் கொள்வார்கள். கூலித் தொழில் செய்து வருபவர்கள் இதனை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றனர். அதனால் இவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment