(ஆர்.யசி)
நாட்டின் நெருக்கடியான பயங்கரவாத நிலைமைகளில்கூட பாதுகாப்பாக செயற்பட முடிந்த எம்மால் இன்று ஒரு சிலர் செய்துள்ள தவறுகளால் முழு நாட்டிற்கும் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்க நேர்ந்துள்ளது. சர்வதேச நிலைமைகள் மற்றும் உள்நாட்டின் நிலைமைகளை கருத்தில் கொண்டு எதிர்காலத்திலும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பில் அவர் இந்த விடயங்களை கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதானது, முழு உலகமும் இன்று கொரோனா தொற்றில் சிக்கியுள்ளது. நாமும் இதனை தவிர்த்துக் கொள்ள எம்மாலான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம். இந்த தொற்று பரவ ஆரம்பித்த காலம் தொடக்கம் நாம் மிகவும் அவதானமாக செயற்பட ஆரம்பித்தோம்.
சீனாவில் இது பரவ ஆரம்பித்த நேரம் முதற்கொண்டு எமது இலங்கையர்களை நாட்டுக்கு வரவழைக்க சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்தோம். இந்திய யாத்திரை சென்றுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்குள் வரவழைக்க நாம் சகல தயார்ப்படுத்தல்களையும் முன்னெடுத்துள்ளோம்.
இந்த நோய் தொற்று பரவல் எவ்வளவு மோசமான தொற்றாக இருந்தாலும், இதனை தடுப்பது சிரமமான காரியமாக இருந்தாலும் மக்களின் சிரமங்களை குறைக்கும் விதத்தில் மட்டுமே அரசாங்கம் செயற்படும் என்பதை கூறிக் கொள்கிறேன்.
மாணவர்களின் பாதுகாப்பிற்காக பாடசாலைகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை வழங்கினோம். பயணிகளின் வருகையை கட்டுபடுத்த விமான நிலையதிற்கான வருகையை கட்டுபடுத்தும் விதத்தில் செயற்பட்டுள்ளோம். உலகத்தின் இன்றைய நிலையையும் நாட்டின் நிலையையும் கருத்தில் கொண்டே இந்த தீர்மானங்களை நாம் முன்னெடுத்தோம். எதிர்காலத்திலும் அதற்கமையவே நாம் செயற்படுவோம்.
இந்த சந்தப்பம் வரையில் முழு நாட்டிற்கும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது. உலகத்தின் மிகவும் பயங்கரமான தீவிரவாதத்திற்கு எதிராக நாம் போராடிய காலத்திலும் கூட முழு நாட்டுக்கும் ஒரே நேரத்தில் ஊரடங்கு சட்டத்தை பிரப்பிக்க நாம் தீர்மானம் எடுக்கவில்லை.
எனினும் ஒரு சிலரின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக எமக்கு இன்று இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. நாட்டு மக்களினதும் பிள்ளை செல்வங்களினதும் உயிரை பாதுகாக்கவே நாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளோம். இதில் ஏதேனும் சிரமங்கள் ஏற்படும் என்றால் அது குறித்து நாம் வருத்தப்படுகின்றோம்.
அதேபோல் மக்களின் நாளாந்த வாழ்க்கைக்கான சகலதையும் வழங்க எம்மால் முடியும். மருந்து, உணவு, எரிபொருள் என்பவற்றை நாம் வழங்க தயாராக உள்ளோம். தேவையான காலம் வரையில் எம்மிடம் களஞ்சியப்படுத்திய பொருட்கள் உள்ளன. இதில் மக்கள் அநாவசியமாக குழப்பமடைய வேண்டிய தேவை இல்லை.
உலகமே இன்று மிகவும் கடினமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த நேரத்தில் மிகவும் சிந்தித்து தூரநோக்குடன் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அரசாங்கம் மற்றும் சுகாதார துறையினர் வழங்கும் ஆலோசனைகளை சரியாக பின்பற்றி செயற்பட்டால் நாம் விரைவில் இந்த நெருக்கடியில் இருந்து விடுபட முடியும். இதைவிட பெரிய சவால்களை வெற்றி கொண்ட இனம் நாம். ஆகவே அனைவரும் இணைந்து இந்த சவாலை வெற்றி கொள்ள முடியும் என நாம் நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment