கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனக்கு மாரடைப்பு உள்ளதாக பொய்யாகத் தெரிவித்து கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் (ராகமை) அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர், தனக்கு நெஞ்சில் வலி இருப்பதாகக் கூறி அனுமதியாகியுள்ளதோடு, அவ்வேளையில் அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்துள்ளதாக, பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த நபர் கடந்த செவ்வாய்க்கிழமை (16) ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் தான் வெளிநாட்டிலிருந்து வந்த விடயத்தை மறைத்துள்ளதோடு, மூச்சு தொடர்பான பிரச்சினைகள், காய்ச்சல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் மருத்துவர்கள் கேட்டுள்ளபோதிலும் அவர் அவற்றையும் மறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து அவருக்கு ECG சோதனைகள் மேற்கொண்ட போது அதில் மாரடைப்பு தொடர்பில் குறிப்பிடுமளவில் எந்தவிதமான மாற்றங்களும் காணப்படவில்லை. அதன் பின்னர் அவர் சாதாரண வார்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த நாள் அவருக்கு, இருமல், காய்ச்சல் என்பன காணப்பட்டுள்ளதை அவதானிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, வார்ட் பதிவாளர் அவரது உறவினர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது, அவர் இத்தாலியிலிருந்து வந்தமை தெரிய வந்துள்ளது.
அதன் பின்னர் மேற்கொண்ட சோதனையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வார்டில் உள்ள மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் நோயாளிகள் உள்ளிட்டோரை தனிமைப்படுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த நபர், இச்செயலை வேண்டுமென்றே செய்துள்ளார் என்பது தெரியவந்த நிலையில், அவர் மீதும், இக்குற்றத்தை மேற்கொள்ள துணையாக இருந்தவர்களுக்கும் எதிராக வத்தளை நீதவான் நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக, அவர் சுட்டிக்காட்டினார்.
ராகமை மருத்துவமனையில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment