ஊரடங்குச் சட்டம் இடையிடையே தளர்த்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் - அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 31, 2020

ஊரடங்குச் சட்டம் இடையிடையே தளர்த்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் - அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை இடையிடையே தளர்த்துவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.

அவ்வாறு இடையிடையே ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் பிரதேசங்களில் சமூக இடைவெளி 50 வீதத்தை விட குறைந்து வருகின்றமை மிகவும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும், சங்கம் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

அதேவேளை சமூக இடைவெளி 80 வீதத்திற்கும் அதிகமாக இருக்கும் வகையில் நடவடிக்கைகளை நாடு பூராவும் நடைமுறைப்படுத்துவது அவசியம் என்றும் மேற்படி சங்கம் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன் உலக அளவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படும் வரை நாட்டிற்குள் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை திறக்கக் கூடாது என்ற வேண்டுகோளையும் அது முன்வைத்துள்ளது. 

நாட்டில் தற்போது முன்னெடுத்து வரும் செயற்பாடுகளால் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்த அளவில் காணப்படும் நிலையில் அதனை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தக்க வைத்துக் கொள்வது அவசியம் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் அதன் அங்கத்துவ நாடுகளில் சமூக இடைவெளி 80 வீதத்திற்கு அதிகமாக இருப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வரும் நிலையில் இலங்கையில் அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை இடை இடையிடையே தளர்த்துவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் அந்த சங்கம் அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளது

இலங்கையில் சமூக இடைவெளி மட்டம் மூன்று நிலைகளில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் சமூக இடைவெளி தொண்ணூறு வீதமாக இருப்பதும் தீவிர கண்காணிப்பு வலயங்களாக ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்தி வரும் பிரதேசங்களில் சமூக இடைவெளி 70 வீதத்திற்கும் அதிகமாக உள்ளமை மகிழ்ச்சி தரும் விடயமாக உள்ளது என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது

அதேவேளை தற்காலிக செயற்பாடாக இடையிடையே ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தும் பிரதேசங்களில் சமூக இடைவெளி 50 வீதத்திற்கும் குறைவாக உள்ளமை மோசமான விளைவுகளுக்கு காரணமாக அமையலாம் என்பதையும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது

குறிப்பாக சமூக இடைவெளியை 80 வீதத்திற்கு அதிகமாக தக்க வைத்துக் கொள்ளும் நோக்குடன் அனைத்து நபர்களையும் முடிந்த அளவில் தமது வீடுகளில் இருக்கச் செய்வது முக்கியம் என்றும் வங்கி நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துகளை வீடுகளுக்கு கொண்டு வினியோகிக்கும் செயற்பாட்டை பலப்படுத்துவது அவசியம் என்றும் அந்த சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது

இந்த வகையில் இடையிடையே ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்கள் மற்றும் போக்குவரத்து முடிந்த அளவில் குறைப்பது மக்கள் அதிகமாக கூடும் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் கடுமையான தீர்மானங்களை மேற்கொள்வது அவசியமாகும்

குறிப்பாக பொருளாதார மத்திய நிலையங்கள் மீன்பிடித் துறைமுகங்கள் மெனிங் வர்த்தக சந்தை உள்ளிட்ட முக்கிய வர்த்தக நிலையங்கள்,தேயிலை தொழிற்சாலை உள்ளிட்ட மிக மோசமான பாதிப்பு இடங்கள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்துவது முக்கியம் என்றும் அந்த சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேவேளை எதிர்வரும் காலங்களில் நோய் பரவல் அதிகரிக்குமானால் அதற்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கும் வகையில் ஆஸ்பத்திரிகளில் பௌதீக மற்றும் மனித வளங்களை அதிகரித்துக் கொள்ளவும் அதற்காக தீவிர சிகிச்சை பிரிவில் கட்டில்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அந்த சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. 

கடந்த சில தினங்களில் நோயாளிகள் உண்மையை மறைத்ததால் நாட்டில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் குறிப்பாக நீர்கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர,களுபோவில, ராகம மற்றும் டி சொய்சா ஆஸ்பத்திரி ஆகியவற்றில் டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் பெருமளவில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நேரிட்டுள்ளதாகவும் அதனால் டாக்டர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்று சங்கம் அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

No comments:

Post a Comment