தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே பல்வேறு கட்சிகள் களமிறக்கப்பட்டுள்ளன - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 3, 2020

தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே பல்வேறு கட்சிகள் களமிறக்கப்பட்டுள்ளன

வடகிழக்கில் தற்போது பல்வேறு கட்சிகள் சூழ்ச்சிகள் மூலமாக தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காக களமிறக்கப்பட்டுள்ளன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டு. ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “வடகிழக்கில் இன்று பல்வேறு கட்சிகள் சூழ்ச்சிகள் மூலமாக தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்காக களமிறக்கப்பட்டுள்ளன.

அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அமைச்சர் தெளிவாக ஒரு விடயத்தினை கூறியுள்ளார். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணைகளில் இருந்து வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார்.

யுத்த காலத்தில் இடம்பெற்ற அழிவுகள், படுகொலைகள், காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுக்கான பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தினை ஏற்படுத்தல், மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் தொடர்பாக கூறப்பட்டுள்ளன. இந்த விடயங்களில் இருந்து அரசாங்கம் பின்வாங்குகின்றது என்ற அர்த்தம் இதன் மூலம் கொள்ளப்படுகின்றது.

உள்ளக பொறிமுறை மூலம் இவற்றினை செய்யமுடியும் என இலங்கையால் கூற முடியும். ஆனால் உள்ளக பொறிமுறையென்பது வெற்றியளிக்காத ஏமாற்றுவித்தை என்பதை கடந்த காலத்தில் நடைபெற்ற பல்வேறு செயற்பாடுகள் மூலம் நாங்கள் விளங்கியுள்ளோம்.

இந்த நிலையில், ஐ.நா.சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணைகளில் இருந்து விலகியதன் ஊடாக இந்த நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தமுடியாது, மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றத்தினை அடையமுடியாது, பொறுப்புக்கூறமுடியாது என்பதன் அர்த்ததினையே நாங்கள் புரிந்துகொள்ளமுடிகின்றது” என மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment