வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்காக அறிமுகமாகியுள்ள "இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்" இணையப் பக்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, March 27, 2020

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்காக அறிமுகமாகியுள்ள "இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்" இணையப் பக்கம்

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலகலாவிய ரீதியில் நெருக்கடியொன்று ஏற்பட்டிருக்கும் நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுடன் தொடர்புகளைப் பேணுவதற்கான இணையப்பக்கமொன்றை வெளிவிவகார அமைச்சு அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இது குறித்து வெளிவிவகார அமைச்சினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நலனுக்காக நாம் இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' என்ற இணையப் பக்கத்தை ஆரம்பித்திருக்கின்றோம்.

இப்பக்கத்திற்கான இணைப்பை www.contactsrilanka.mfa.gov.lk என்ற இணைய முகவரியில் பிரவேசிப்பதன் ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் அமைச்சின் வலைத்தள பக்கமான, www.mfa.gov.lk என்ற இணையத்தளம் மூலமாகவும் அனுகலாம்.

கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காகவும், விரைவான மற்றும் திறமையான சேவையை வழங்குவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நோக்கிலுமே இந்த இணையப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடி நிலையில் அவசரமான சந்தர்ப்பங்களில் வெளிவிவகார அமைச்சு தமது நாட்டின் பிரஜைகளை அணுகுவதற்கும், உதவுவதற்கும் ஏதுவான வகையில், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் இந்த இணையப்பக்கத்தின் அடிப்படைச் செயற்பாடுகளில் தம்மைத் தாமாகவே பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

உண்மையான தரவுகளின் அடிப்படையில் விரைவான நடவடிக்கைகளை அமைச்சு முன்னெடுப்பதற்கும் இந்த இணையத்தளம் உதவியாக அமையும். அதுமாத்திரமன்றி வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை இவ்வலையமைப்பு வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுடன் இணைத்து வைக்கும்.

இந்த இணைய முகப்பினூடாக வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களினால் வழங்கப்படும் தகவல்கள் அவர்களின் தனியுரிமையை உறுதிசெய்யும் வகையில் பாதுகாக்கப்படுவதுடன், உரிய நபரின் அனுமதியின்றிப் பகிரப்படாது. 

இந்த இணையப்பக்கமானது, குறிப்பாக அவசரமான காலங்களில் விரைவான பதில்களை வழங்குவதற்காகவும், வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கான தற்போதைய சேவை விநியோகத்தை உயர்வான மட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கும் உதவும் என்று நம்புகின்றோம்.

வெளிநாட்டில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் இதனூடாகப் பயனடைவர் என்றும் எதிர்பார்க்கின்றோம்.

No comments:

Post a Comment