(ஆர்.விதுஷா)
பொதுத் தேர்தலின் போது ஒரு பலம் வாய்ந்த கூட்டணியமைத்து போட்டியிடுவதை நோக்காக கொண்டே ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் அனுமதியுடன் சஜித் பிரேமதாச தலைமையில் கூட்டணி உருவாக்கப்பட்டதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய தேசியக் கட்சி பிளவு படுவதற்கான வாய்ப்பில்லை எனவும் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இதற்கு இடமளிக்கமாட்டார் என தான் நம்புவதாகவும் கூறினார்.
இதேவேளை கூட்டணியின் சின்னம் செயற்குழுவினால் தீர்மானிக்கப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் , இது தொடர்பில் காணப்படும் சட்டசிக்கல்களை தீர்த்துக் கொண்டதன் பின்னர் விரைவில் அறிவிப்போம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, முன்னாள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி நேற்று உத்திர்யகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்த கூட்டணியில் பிரதான கட்சிகள், சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் என்பன ஒன்றிணைந்துள்ளன. கூட்டணியின் ஆரம்பத்துடனேயே தேர்தலுக்கான தயார்படுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாசவும் அதன் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகப்பூர்வமாக அங்கிகாரம் வழங்கியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானத்திற்கமையவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பலம் வாய்ந்த இந்த கூட்டணியை கண்டு அஞ்சும் சிலர் சட்டத்துக்கு புறம்பாண முறையில் உருவாக்கப்பட்ட கூட்டணியென சித்தரித்து வருகின்றனர்.
வேட்பாளர் தெரிவுக்குழு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நாளை கூடவுள்ளது. அதற்கு அடுத்த தினங்களில் வேட்பாளர் தெரிவுக்கான நேர்முகப் பரீட்சைகள் தொடர்ந்தும் இடம்பெறும்.
இதன்போது ஊழல் மோசடிக்காரர்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது. நாட்டு மக்கள் விரும்பும் ஊழல் மோசடிகளற்ற கட்சியையே நாம் உருவாக்கியுள்ளோம்.
இந்த கூட்டணியில் அதிகளவாக ஐக்கிய தேசியக் கட்சியினரே அங்கத்துவம் வகிக்கின்றனர். அதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் 95 வீதமான உறுப்பினர்கள் இதில் உறுப்புரிமை பெற்றுள்ளனர்.
இதேவேளை பொதுத் தேர்தலின் போது ஒரு பலமான கூட்டணியமைத்து போட்டியிடுவதை நோக்காக கொண்டே செயற்குழுவின் அனுமதியுடன் சஜித் தலைமையில் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி பிளவு படுவதற்கான வாய்ப்பில்லை. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இதற்கு ஒத்துழைக்கும் வகையில் செயற்படுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
கட்சி உறுப்பினர்களால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டு, செயற்குழுவினால் அங்கிகரிக்கப்பட்ட சின்னமொன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சின்னம் தொடர்பான சட்ட சிக்கல்கள் தொடர்பில் தீர்வுகளை எடுத்தன் பின்னர் சின்னம் தொடர்பில் அறிவிக்கப்படும்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பலவீனமடைந்துள்ளது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறி மாறுப்பட்ட கோணத்தில் செயற்பட்டு வருகின்றது. இதன் காரணமாக நாட்டு மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என அவர் இதன்போது தெரிவித்தார்.
No comments:
Post a Comment