ரவி கருணாநாயக்கவை தேடி தொடர்ந்தும் வலைவீச்சு - குற்றப்புலனாய்வு குழுக்களுக்கு மேலதிகமாக உளவுப் பிரிவும் களமிறக்கம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 10, 2020

ரவி கருணாநாயக்கவை தேடி தொடர்ந்தும் வலைவீச்சு - குற்றப்புலனாய்வு குழுக்களுக்கு மேலதிகமாக உளவுப் பிரிவும் களமிறக்கம்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டு மூன்று நாட்கள் கடந்துள்ள போதிலும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட தரப்பினர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

கடந்த மூன்று நாட்களாக அவர்கள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட சில இடங்களுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் சென்றிருந்த போதிலும் அவர்கள் அங்கிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரைக் கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புக் குழுக்களுக்கு மேலதிகமாக உளவுப் பிரிவின் குழுவொன்றும் களமிறக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவத்தின் முன்னாள் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் உட்பட 10 சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த 6 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி மற்றும் மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின்போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால், கோட்டை நீதவான் நீதிமன்றில் கடந்த புதனன்று புதிய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 7 ஆம் திகதி முதல் ரவி கருணாநாயக்கவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் முன்னெடுத்திருந்தனர்.

அதற்கமைவாக ரவி கருணாநாயக்கவை கைது செய்ய அவரின் பத்தரமுல்ல ரஜமல்வத்த பகுதியில் உள்ள வீட்டுக்கு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் 45 நிமிடங்கள் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். இருந்தபோதும் அவர் வீட்டில் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அவரை கைது செய்வதற்காக இரு குற்றப்புலனாய்வு திணைக்கள பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன.

அவர்களின் முயற்சியும் தோல்வியடைந்ததையடுத்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புக் குழுக்களுக்கு மேலதிகமாக உளவுப் பிரிவின் குழுவொன்றும் களமிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment