அநுராதபுரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்துங்கள் - சி.சிவமோகன் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 21, 2020

அநுராதபுரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்துங்கள் - சி.சிவமோகன்

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பாதுகாப்புக் கோரி ஏற்பட்டுத்தப்பட்ட முரண்பாட்டை அடுத்து அங்கு ஏற்பட்டுள்ள நிலைமைகளில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளைப் பாதுகாக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவிக்கையில், “இன்று மாலை அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சில கைதிகள் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஏனைய கைதிகள் தமக்கான மருத்துவப் பாதுகாப்பை கருத்திற் கொண்டு தம்மை விடுவிக்குமாறு கோரி சிறைக் காவலர்களுடன் முரண்பட்டதாக அறிய முடிகின்றது.

இதன் காரணத்தினால் கைதிகள் சிறைக் கூடங்களின் கதவுகளை உடைத்து பிரதான கதவினை உடைக்க முற்பட்டபோது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன் காரணமாக மூன்று கைதிகள் படுகாயமடைந்த நிலையில் உயிராபத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சூழலில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உடனடியாக உறுதிப்படுத்தி அவர்களுக்கு பாதுகாப்பை வழங்க ஆவன செய்ய வேண்டும்.

அத்துடன் சிறைச்சாலைக்குள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வீசப்படுவதால் அங்குள்ள கைதிகள் அனைவரும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே கண்ணீர்ப் புகைக் குண்டுகளால் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ள கைதிகள் அனைவரையும் மனிதர்களாக எண்ணி மனிதாபிமானமாக இந்த அரசாங்கம் நடத்த வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment