கொரோனா வைரஸ் பீதிக்கு இடையில் ஏவுகணை மூலம் வட கொரியா மீண்டும் மிரட்டல் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 21, 2020

கொரோனா வைரஸ் பீதிக்கு இடையில் ஏவுகணை மூலம் வட கொரியா மீண்டும் மிரட்டல்

அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் மௌனித்து வைத்திருந்த வட கொரியா அரசு கொரோனா வைரஸ் பீதிக்கு இடையில் இரு ஏவுகணைகளை இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் பன்மடங்காக அதிகரித்துவரும் நிலையில் வட கொரியா அரசு இதுவரை இந்த வைரஸ் தொற்று தொடர்பாக வெளிப்படையாக எந்த புள்ளிவிவரத்தையும் வெளியிடவில்லை.

எனினும், கொரோனா வைரஸ் தாக்கத்தை முழுவீச்சில் கட்டுப்படுத்தும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருவதாக அந்நாட்டு அரசுக்கு சொந்தமான ஊடகங்கள் அவ்வப்போது செய்தி வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 6.45 மற்றும் 6.50 மணிக்கு அடுத்தடுத்து இரு ஏவுகணைகளை வட கொரியா பரிசோதித்ததாக தென் கொரியா ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணைகள் 50 கிலோ மீட்டர் உயரத்தில் சுமார் 410 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட கொரியாவிடம் உள்ள ஆபத்தான ஆயுதங்களை ஒப்படைப்பது தொடர்பாக அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் அன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடத்திய இரு சுற்று பேச்சுவார்த்தைகள் கடந்த 2019 ஆம் ஆண்டில் தோல்வியில் முடிந்த பின்னர், இதுபோல் அத்துமீறிய ஏவுகணை பரிசோதனைகளை வட கொரியா அரசு சிலமுறை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பரிசோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ள தென் கொரியா அரசு உலக நாடுகள் கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்வது தொடர்பாக பதற்றத்தில் உள்ள நிலையில் இதுபோன்ற தேவையற்ற ஏவுகணை பரிசோதனை இந்த நேரத்துக்கு உகந்ததல்ல என குற்றம்சாட்டியுள்ளது.

No comments:

Post a Comment