சிரியாவில் ரஸ்யா யுத்த குற்றங்களில் ஈடுபடுகின்றது - ஐ.நா விசாரணை குழு முதல் தடவையாக குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 3, 2020

சிரியாவில் ரஸ்யா யுத்த குற்றங்களில் ஈடுபடுகின்றது - ஐ.நா விசாரணை குழு முதல் தடவையாக குற்றச்சாட்டு

சிரியாவில் ரஸ்யா யுத்தக் குற்றங்களை இழைத்துள்ளது என ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது.

சிரியா தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் ஐ.நா குழுவொன்று இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

சிரியாவில் ரஸ்யா யுத்தக் குற்றங்களை இழைத்துள்ளது என ஐ.நா குற்றம் சாட்டுவது இது முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

2019 யூலை முதல் இந்த வருட ஆரம்பம் வரையான காலப்பகுதி வரை சிரியாவில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சிரியா தொடர்பான சுயாதீன சர்வதேச விசாரணை ஆணைக்குழு மருத்துவ நிலையங்கள் போன்றவற்றின் மீதான சிரிய அரச படைகளின் தாக்குதல்கள் குறித்து கவனம் செலுத்தியுள்ளது.

ரஸ்ய விமானங்கள் பொதுமக்களின் நிலைகள் மீது நேரடியாக தாக்குதல்களை மேற்கொண்டன என்பதற்கான அதிக ஆதாரங்கள் காணப்படும் இரு சம்பவங்கள் குறித்து விசாரணை ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

மராட் அல் நுமான் என்ற பகுதியில் உள்ள சந்தையொன்றின் மீது கடந்த வருடம் இடம்பெற்ற தாக்குதல் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முதலில் ரஸ்ய விமானங்கள் தாக்குதலை மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்தவர்கள் காயம்பட்டவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் மனிதாபிமான பணியாளர்கள் ஈடுபட்டிருந்தவேளை மற்றுமொரு தாக்குதல் இடம்பெற்றது என விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உட்பட 43 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 109 பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டாவது தாக்குதல் ஹாஸ் என்ற பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பகுதியொன்றில் இடம்பெற்றது என ஐ.நா விசாரணை குழு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் நான்கு குழந்தைகள் எட்டு பெண்கள் உட்பட 20 ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.

கிடைத்துள்ள ஆதாரங்கள், வாக்குமூலங்கள், வீடியோக்கள், விமான உரையாடல்கள் உட்பட பலவற்றின் அடிப்படையில் இரண்டு தாக்குதல்களையும் ரஸ்ய விமானங்கள் மேற்கொண்டன என நம்புவதற்கான இடமுள்ளது என ஐ.நா தெரிவித்துள்ளது.

இரண்டு தாக்குதல்களிலும் ரஸ்ய விமானங்கள் இராணுவ இலக்கொன்றின் மீது தாக்குதலை மேற்கொள்ளவில்லை, பொதுமக்கள் இலக்குகள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டு யுத்த குற்றங்களை இழைத்தன என ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment