கொரோனாவை கண்காணிக்கும் வகையில் சகல மாவட்ட, பிரதேச மற்றும் கிராம சேவகர் பிரிவுகளிலும் காரியாலயங்கள் - News View

Breaking

Post Top Ad

Monday, March 16, 2020

கொரோனாவை கண்காணிக்கும் வகையில் சகல மாவட்ட, பிரதேச மற்றும் கிராம சேவகர் பிரிவுகளிலும் காரியாலயங்கள்

(எம்.மனோசித்ரா)

இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர் இணங்காணப்பட்டுள்ள நிலையில் இராஜகிரியவில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பிரிவின் கீழ் சகல மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகளிலும் கிளைக் காரியாலயங்கள் அமைக்கப்படவுள்ளதாக பொதுநிர்வாகம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொதுநிர்வாகம், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளதாவது.

கொரோனா கட்டுப்பாட்டின் பிரிவின் கிளைக் காரியாலயங்களை அமைப்பது தொடர்பில் நாடளாவிய ரீதியிலுள்ள மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரதேசங்களிலுமுள்ள பொலிஸ் அதிகாரிகளும் இவற்றுடன் தொடர்புபடுத்தப்படுவர். இதன் மூலம் வைரஸ் பற்றி சகல தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

கிராம சேவர்கள் பிரதேசங்களிலுள்ள சுகாதார பணியாளர்கள், டெங்கு ஒழிப்பு பிரிவினர் விவசாயத்துறை சார் அதிகாரிகள், பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகள் ஆகியோருடன் தொடர்பினை ஏற்படுத்தி கிராம மக்கள் தொடர்பான தகவல்கள் சேகரித்தல் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தில் உள்ளிட்ட ஏனைய நடவடிக்ககளை முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இணங்காணப்படுபவர்கள் குறித்த தகவல்கள் சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் தொடர்பில் பாதுகாப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்தோடு அத்தியாவசிய அரச சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு அரச திணைக்களங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து அவற்றை ஒன்லைன் மூலம் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை கிராம சேவர்கள் முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறான பொது சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் திணைக்களங்களில் வருகை தரும் மக்களின் பாவனைக்கான கைகளை சுத்தப்படுத்தும் திரவ பொருட்கள் (Handwash, Sanitizer)என்பவற்றை கொள்வனவு செய்து வழங்க வேண்டும்.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் மேலதிக தகவல்களை www.epid.gov.lk என்ற சுகாதார அமைச்சின் இணையதளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad