உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரச மருந்தக கூட்டுத்தாபன விற்பனை நிலையங்களை தவிர ஏனைய ஒளடத விற்பனை நிலையங்களையும் சொகுசு வர்த்தக நிலையங்களையும் உடன் மூடுமாறு பொலிமா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் தற்போது நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களின் நலன்கருதி அனைத்து ஒளடத நிலையங்களையும் திறந்து வைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.
மக்களின் நலன் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவை கருத்திற்கொள்ளாத சிலர் இந்த ஒளடத நிலையங்களில் ஏனையப் பொருட்களையும் விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அத்தியாவசிய உணவுப் பொருட்களை வீடுகளுக்கு விநியோகிப்பதற்காக சொகுசு வர்த்தக நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த போதும், குறித்த வர்த்தக நிலையங்களை திறந்து வைத்து வர்த்தக நடவடிக்கைகள் முற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதனாலேயே பொலிஸ்மா அதிபர் இவற்றை மூடுமாறு தெரிவித்துள்ளதுடன் இவ்வாறு மூடாதிருக்கும் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனையும் வழங்கியுள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையிலேயே மக்களுக்கு அவசியமான ஓளடதங்களை பெற்றுக் கொள்வதற்காக அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்கள் அனைத்தும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment