இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நீதியும், நியாயமும், தர்மமும் நிலைநாட்டப்படாது : சுரேஷ் பிரேமச்சந்திரன் - News View

About Us

About Us

Breaking

Monday, March 30, 2020

இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நீதியும், நியாயமும், தர்மமும் நிலைநாட்டப்படாது : சுரேஷ் பிரேமச்சந்திரன்

மிருசுவிலில் இடம்பெற்ற மூர்க்கத்தனமான கொலையுடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய்க்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை இரத்து செய்து அவருக்கு பொதுமன்னிப்பு அளித்து அவரை விடுதலை செய்தமை இலங்கையில் ஒருபோதும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியும், நியாயமும், தர்மமும் நிலைநாட்டப்படாது என்பதை மீண்டும் ஒருமுறை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் நடைபெற்ற இனவிடுதலைக்கான போராட்ட காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் கடலிலும் நிலத்திலும் பல்வேறுபட்ட படுகொலைகள் இராணுவத்தினராலும் கடற்படையினராலும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இது ஒரு மறைக்கப்பட முடியாத வரலாற்று உண்மை. 

இவை தொடர்பாக ஒரு சில படுகொலைகள் மாத்திரமே நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டது. அவ்வாறான சில விசாரணைகளில் குற்றவாளிகள் முழுமையாக விடுவிக்கப்பட்ட சம்பவங்களும் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்தும் பாதிப்படையும் சூழ்நிலையையும்தான் நாங்கள் பார்க்கக்கூடியதாக இருந்தது. 

மூதூரில் குமாரபுரம் என்னும் கிராமத்தில் நடைபெற்ற படுகொலையும் அது தொடர்பாக நீதித்துறை எடுத்த முடிவுகளும், மக்களை விரக்திக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியதுடன், நீதித்துறையின் மீதிருந்த அற்ப சொற்ப நம்பிக்கையையும் இல்லாமல் செய்தது. 

மிருசுவில் கிராமத்தில் தமது வாழ்விடங்களைப் பார்க்கச் சென்ற அக்கிராமத்து மக்கள் சிறுவர்கள் உட்பட எட்டு பேர் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டு மலசலக் குழிக்குள் வீசப்பட்டார்கள். பல இராணுவத்தினரின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோதிலும் சுனில் ரட்னாயக்க என்ற சிப்பாய் மாத்திரமே தண்டிக்கப்பட்டு மரண தண்டனை தீர்ப்பும் வழங்கப்பட்டது. 

உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமின்றி சட்டத்தின் முன் குற்றவாளியாக இனங்காணப்பட்டு தண்டிக்கப்பட்ட ஒருவரை, ஜனாதிபதி தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பாவித்து அவரை விடுவித்தமையானது நாட்டின் நீதித்துறையையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. 

கடந்த காலங்களில் இலங்கையின் நீதித்துறை என்பது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எத்தகைய நீதி நியாயங்களை வழங்கவில்லை என்பதை நாம் பலமுறை வலியுறுத்தி வந்துள்ளோம். 

தற்போது ஜனாதிபதியின் நடவடிக்கை என்பது தமிழ் மக்கள் இந்த நாட்டில் நீதி, நியாயம், சம உரிமை என்பவற்றைக் கோருவதற்கு அருகதையற்றவர்கள் என்ற சிங்கள மேலாதிக்கவாத அரசாங்கத்தின் முகத்திரையை துலாம்பாரமாக எடுத்துக்காட்டுகிறது. 

கொரோனா வைரசின் தாக்கத்தினால் நாடு பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்க தங்களை விடுவிக்குமாறு அரசியல் கைதிகள் பல வருடங்களாகப் போராடியும் எதுவுமே நடைபெறாமலிருக்க, கொலைக்குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரை ஜனாதிபதியின் உத்தரவுடன் நாட்டின் பாதுகாப்பு செயலாளரே நேரடியாக சிறைச்சாலைக்குச் சென்று கைலாகு கொடுத்து விடுவிப்பதென்பது இத்தகைய இக்கட்டான சூழலிலும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாத சிந்தனையிலேயே இந்நாடு தொடர்ந்தும் பயணிக்கிறது என்ற உண்மையை நிரூபிக்கிறது. 

அது மட்டுமன்றி, தமிழ் மக்களைத் தொடர்ந்தும் அந்நியப்படுத்தி இந்நாட்டில் இரு சமூகத்தவர்களும் கைகோர்த்துச் செயற்பட முடியாத சூழலை இந்த அரசாங்கமே உருவாக்கி வருகிறது. இலங்கை அரசாங்கத்தினோடு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுக்கலாம் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகமும் பல்வேறுபட்ட மனித உரிமைகள் அமைப்புகளும் முயற்சித்து வந்திருக்கின்றன. 

ஆனால் அரசாங்கத்தின் நடவடிக்கைகளான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் தீர்மானங்களிலிருந்து வெளியேறியதும், இலங்கை உயர் நீதிமன்ற தீர்ப்பை உதாசீனம் செய்து குற்றவாளிகளை விடுவிப்பதும் இலங்கை அரசாங்கத்தினுடைய மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகளில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்திற்கும் சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கும் அவநம்பிக்கையையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. 

சர்வதேச அமைப்புகளின் இலங்கை அரசின் மீதான அவநம்பிக்கையானது தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கத்தை சர்வதேச விசாரணைகளுக்கு உட்படுத்தக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். 

இலங்கை அரசாங்கத்தினுடைய தமிழ் மக்கள் விரோத செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளை உலக நாடுகளும் புரிந்துகொள்ள வேண்டும் என்று கோருகின்றோம்.

No comments:

Post a Comment