(எம்.மனோசித்ரா)
கொரோனா வைரஸ் பரவலிலிருந்து ஒவ்வொருவரும் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொண்டுள்ள மதத் தலைவர்கள், துரிதமாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தலிலிருந்து மீண்டு ஏனைய நாடுகளுக்கு இலங்கை முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மல்வத்து பீடத்தின் அநுநாயக்க திம்புல் கும்புரே விமலதம்ம தேரர் மற்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் தெரிவித்துள்ளதாவது,
மல்வத்து பீடத்தின் அநுநாயக்க திம்புல் கும்புரே விமலதம்ம தேரர் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
அதற்கமைய அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படுவதோடு ஏனைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. எனவே நாம் ஒவ்வொருவரும் வீடுகளில் பாதுகாப்பாக இருந்து எமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவிக்கையில், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள சில சட்ட ரீதியான நடவடிக்கைகளின் காரணமாக வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று நம்புவோம். இதற்காகவே சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பதை நாம் அனைவரும் புரிந்து செயற்பட வேண்டும்.
எனவே சேவையில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள் விசேடமாக பாதுகாப்பு துறையினரின் அர்ப்பணிப்பிற்கு மதிப்பளித்து அவர்களுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு இடையூகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம் என்று பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
நாடு என்ற ரீதியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் அச்சுறுத்தலிலிருந்து விரைவாக மீண்டு பாதிக்கப்பட்டுள்ள ஏனைய நாடுகளுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்வோம் என்றார்.
No comments:
Post a Comment