திட்டமிட்டவாறு பொதுத் தேர்தல் நடைபெறும், எந்த நாட்டில் இருந்து வந்தாலும் மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுவர் - சார்க் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி! - News View

Breaking

Post Top Ad

Sunday, March 15, 2020

திட்டமிட்டவாறு பொதுத் தேர்தல் நடைபெறும், எந்த நாட்டில் இருந்து வந்தாலும் மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுவர் - சார்க் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி!

ஏப்ரல் மாதம் பாராளுமன்ற பொதுத் தேர்தலானது திட்டமிட்டபடி நடைபெறும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்றைய தினம் தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்று குறித்து ஆலோசிப்பதற்காக சார்க் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை காணொளி மூலமாக இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதி இதனை சுட்டிக்காட்டியுள்ளார். 

தற்போது சர்வதேச நாடுகள் கொரோனா தாக்குதலினால் எதிர்கொண்டுள்ள நிலையில் இந்நிய பிரதமர் நரேந்திர மோடி தெற்காசிய நாடுகளின் தலைவர்களை இவ்வாறு ஒன்றுப்படுத்தியுள்ளமை வரவேற்புக்குரியது. தகவல் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது அனைவருக்கும் பயனுடைய தீர்மானம் பெற்றுக் கொள்ள முடியும். 

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குலின் போது இலங்கையின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்திருந்தது. குறுகிய காலத்திற்குள் சுற்றுலாத்துறை முன்னேற்றமடைந்தது. தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனை எம்மால் மீண்டும் சீர் செய்துகொள்ள முடியும். 

கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடையாமல் இருப்பதை தடுப்பதே தற்போதைய பாரிய சவாலாகும். பாதுகாப்பு நிமித்தம் சுற்றுலாத்துறையின் மீது அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக பணயத்தடை விதிக்கபபட்டுள்ளது. 

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் இலங்கை பிரஜைகள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பிற்கு உட்டுப்படுத்தப்படுவார்கள். எந்த நாடுகளில் இருந்து வருகின்றார்கள் என்று ஆராயப்படமாட்டாது. 

மருந்துவத்துறையின் பரிந்துரைகளின் பிரகாரம் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தீவிரமான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல் சுகாதார சேவைகளினால் நாளாந்தம் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. அத்துடன் அரசாங்கம் என்ற ரீதியில் பல தீர்மானங்களை கொரோனா தாக்கம் நாட்டுக்குள் உள்வருவதற்கு முன்னர் இருந்து எடுத்துள்ளோம். 

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் நோய் தாக்கம் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் முதலாவதாக கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர் இலங்கை பிரஜையல்ல, சீன நாட்டு பெண்மணி இவர் இந்த நோயில் இருந்து முழுமையாக குணமடைந்து தனது நாட்டுக்கு சென்றுள்ளார். 

சீனாவில் வுஹான் மாகாணத்தில் இருந்த இலங்கை மாணவர்கள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நாட்டுக்கு வரவழக்கப்பட்டு தியத்தலாவ முகாமில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டார்கள். அவர்களில் எவருக்கும் கொரோனா தொற்று தாக்கம் செலுத்தப்படவில்லை என்பது மருத்துவ பரிசோதனைகளை தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்டன. 

கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கை பிரஜை முதலாவதாக அடையாளப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அரசாங்கம் பல துரிதகரமான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. இத்தாலி மற்றும் தென் கொரியாவில் அதிகளவில் இலங்கை பிரஜைகள் வசிக்கின்றார்கள். நெருக்கடியான நிலையில் அவர்கள் நாடு திரும்பியுள்ள நிலையில் அவர்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் பல விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. 

தென்கொரியா, இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் இலங்கையர்கள் பாதுகாப்பான முறையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள். அவர்களது அடிப்படை தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதுவரையில் கொரோனா வைரஸ் தாக்கததினால் எவரும் மரணிக்கவில்லை. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதே பிரதான இலக்காக காணப்படுகின்றது. 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாடசாலைகள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி சார் நிறுவனங்களுக்கு இரண்டு வார கால விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் இரண்டு வார காலத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் மதத் தலைவர்களின் தீர்மானத்திற்கு அமைய மத அனுஸ்டான நிகழ்வுகளும் தவிர்க்கப்பட்டுள்ளன. வைரஸ் தொற்று தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு துறைசார் அமைப்புக்களுடனான வழிமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

மேலும் ஒரு சில நாடுகளுக்கு பயணத்தடை தற்காலிகமாக விதிக்கப்பட்டுள்ளதுடன், இராஜதந்திர மட்டத்திலும் ஒரு சில தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்ட தீர்மானங்கள். 

அத்துடன் சுற்றுலாத்துறை தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளன. வேட்புமனுத்தாக்கல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை இடம் பெறும். எவ்வாறாயினும். ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறும். அதற்கான வழிமுறைகள் திட்டமிட்ட விதத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. 

முறையான வழிமுறைகளை கையாண்டால் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்த முடியும் என்றும் இதன்போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். 

இந்த காணொளி கலந்துரையாடலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ், நேபாளம் பிரதமர் கே.பி.சர்மா ஒலி, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி, பூட்டான் பிரதமர் லோடே ஷெரிங், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா, பாகிஸ்தான் பிரதமருக்கான சிறப்பு உதவியாளர் ஜாபர் மிர்ஸா ஆகியோர் இணைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வீரகேசரி

No comments:

Post a Comment

Post Bottom Ad