ஐக்கிய தேசிய கட்சியை பிளவுபடுத்தும் நோக்கம் தமக்கில்லை - புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்திடுவது தொடர்பிலும் ஆராய்வு - News View

Breaking

Post Top Ad

Thursday, March 5, 2020

ஐக்கிய தேசிய கட்சியை பிளவுபடுத்தும் நோக்கம் தமக்கில்லை - புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்திடுவது தொடர்பிலும் ஆராய்வு

(ஆர்.விதுஷா)
ஐக்கிய தேசிய கட்சியை பிளவுபடுத்தும் நோக்கம் தமக்கில்லை என்றும் மாறாக ஒரே அணியாக பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணக்கப்பாடு காணப்படும் என தாம் நம்புவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுசெயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

நுகேகொடையில் அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர் நியமனக்குழு அமைக்கப்பட்டு அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில், இதற்காக விண்ணப்பங்கள் கிடைத்த வண்ணமுள்ளன. இந்நிலையில், எமது கட்சியுடன் வந்து இணைந்து கொள்ளுமாறு கட்சிகள் மற்றும் கூட்டணிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவின் ஏகமனதான தீர்மானத்திற்கு அமையவே இந்த கூட்டணியமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இதில் அதிகமாக ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தோரே அங்கத்துவம் வகிக்கின்றனர்.

அத்துடன், கூட்டணியின் சின்னம் தொடர்பில் சிக்கல் நிலை தோன்றியது. யானை மற்றும் அன்னம் சின்னங்களுக்கு விருப்பு காணப்பட்டது. யானை சின்னத்திற்கு உடன்பாடு எட்டப்பட்டிருந்த நிலையில் அதற்கு சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டது. அதற்கான கலந்துரையாடல்களை முன்னெடுத்த சமயத்தில் கடந்த மூன்று மாத காலமாக இழுபறி நிலை காணப்பட்டது. 

ஆகவேதான் அனைவரும் இணைந்து பொது சின்னமொன்றில் போட்டியிடுவதற்கு தீர்மானித்தோம். எமது கட்சிக்கென்று சின்னமொன்றுண்டு. ஆயினும் பொது சின்னத்தில் போட்டியிடுவதன் ஊடாக இந்த பிரச்சினைக்கான தீர்வினை காணக்கூடியதாகவிருக்கும், அந்த வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைசாத்திடுவது தொடர்பிலும் ஆராயப்படுகின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad