இலங்கையை சர்வதேச நீதிமன்றில் முற்படுத்துவதற்கு பிரேரணைக்கு ஆதரவளித்த நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 5, 2020

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் முற்படுத்துவதற்கு பிரேரணைக்கு ஆதரவளித்த நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்

இலங்கையில் இறுதிப்போரின் போது நடைபெற்ற இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய சர்வதேச நீதிமன்றில் இலங்கையை முன்நிறுத்தி விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐ.நா. பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் இன்று ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் இறுதிப்போரின் போது நடைபெற்ற இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய சர்வதேச நீதிமன்றில் இலங்கையை முன்நிறுத்தி விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு மனித உரிமைப் பேரவையில் இலங்கையுடன் இணைந்து பிரேரணைகளை கொண்டுவருவதற்காக செயற்பட்ட நாடுகளே செயற்பட வேண்டும்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் யுத்தம் முடிவடைந்த காலம் முதல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை உட்பட்ட அமைப்புக்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ளன. 
குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் நேரடியாக கள ஆய்வினை மேற்கொண்டிருந்த முன்னாள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை உட்பட பல விசாரணை அறிக்கைகள் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு கையளிக்கப்பட்டிருக்கின்றன. எனவே அவற்றை ஆவணமாகக் கொண்டு இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

இலங்கை அரசாங்கமும் இராணுவத்தினரும் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான ஆதாரங்கள் ஆவணங்கள் பல நேரடியாகவே பெறப்பட்டும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினரிடம் உள்ளன.

ஏற்கனவே இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணைகள் கொண்டுவரப்பட்டபோது அந்தப் பிரேரணைகளை முன்மொழிந்த நாடுகளும் ஆதரவளித்த நாடுகளுமே தொடர்ந்தும் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கையை சர்வதேச நீதி மன்றில் முன்னெடுக்கப்படவேண்டிய விசாரணைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் தற்போதைய சூழலில் தமிழ் மக்கள் அச்சமான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வருகின்றார்கள் இவை தொடர்பிலும் ஐ.நா.மனித உரிமைப்பேரவை கவனம் செலுத்தவேண்டும் என்றுதான் வலியுறுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ். விஷேட நிருபர்

No comments:

Post a Comment