(எம்.மனோசித்ரா)
பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரங்களை முன்னெடுக்கும் போது குறிப்பிட்ட சில மாவட்டங்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து ஆராயப்படுகிறது. எனினும் உத்தியோகபூர்வமாக எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மற்றும் பிரசாரங்களை முன்னெடுப்பது தொடர்பில் பொதுஜன பெரமுனவுடனான பேச்சுவார்த்தைகள் என்பன தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் இதுவரையில் எவ்விதமான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் அல்லது கலந்துரையாடல்களில் நாம் ஈடுபடவில்லை. போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்ட பின்னரே பிரசார நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.
பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுன் இணைந்து கூட்டணி அமைத்திருக்கிறது. எனவே பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து இரு தரப்பும் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம் எடுக்கப்படும்.
அதேவேளை கூட்டணி அல்லாமல் கட்சி ரீதியான பிரசாரங்களை முன்னெடுக்கும் போது சில மாவட்டங்களில் தனித்து செயற்பட வேண்டியிருக்கும்.
எவ்வாறிருப்பினும் எமது இலக்கு ஜனாதிபதித் தேர்தலைப் போன்றே பொதுத் தேர்தலிலும் வெற்றி பெருவதேயாகும். வெகுவிரைவில் இரு தரப்பும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் நடைபெறும் தினம், மாவட்டம் என்பன தொடர்பில் அறிவிக்கப்படும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
No comments:
Post a Comment