நீர்கொழும்பு, பெரியமுல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்றில் சந்தேகநபர் ஒருவர் இன்று (10) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு, பெரியமுல்லைப் பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதியில் பெரியமுல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதோடு, நால்வர் படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு(9) இடம்பெற்றுள்ளது.
உணவகத்தில் பணியாளராக பணியாற்றிய முஹம்மத் அஸீஸ் என்பவரே கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவராவார்.
குறித்த உணவகத்திற்கு வேன் ஒன்றில் அறுவர் அடங்கிய குழுவினர் உணவருந்த வந்துள்ளனர். அவர்கள் உணவு அருந்துவதற்கு கதிரைகளில் அமர்ந்தவாறு தாம் கொண்டு வந்த மதுபான போத்தல்களை எடுத்து மது அருந்த முற்பட்டுள்ளனர்.
இதன்போது உணவக பணியாளர்களும் உரிமையாளரும் இதனை தடுத்துள்ளனர். வெளியில் சென்று மதுபானம் அருந்துமாறு அவர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து அவர்களில் ஒருவர் கடையின் உரிமையாளரை தாக்கியுள்ளதோடு தம்வசம் வைத்திருந்த கத்தியினால் குத்தியுள்ளார்.
அதனை அடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதோடு உணவருந்த வந்திருந்தவர்கள் தம்மிடமிருந்த கூரிய ஆயுதங்களினால் கடை உரிமையாளரையும் அவரது சகோதரரரையும், பணியாளர்களையும் தாக்கியுள்ளனர்.
கடையில் உள்ளோர் திருப்பித் தாக்கியபோது அவர்கள் அங்கிருந்து தப்பியோடி தலை மறைவாகியுள்ளனர். அவர்கள் தாம் வந்த வேனையும் கைவிட்டுச் சென்றுள்ளனர். சம்பவத்தை அடுத்து பிரதேசவாசிகள் பலர் அங்கு ஒன்றுகூடினர்.
இதேவேளை நீர்கொழும்பு பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், விமானப்படையினர் சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
(அசோக்குமார்)
No comments:
Post a Comment