ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தரப்பிற்கும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தரப்பிற்கும் இடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று கூடிய ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு கூட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிடவும் வேட்புமனுத் தாக்கலுக்கென குழுவொன்றை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பையும் இணைத்துச் செயற்படும் வகையில் கட்சி செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதற்கு, தான் தயாராக இருந்த போதும் சஜித் பிரேமதாச தரப்பு நேற்றைய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஜக்கிய மக்கள் சக்தியின் கீழ் பெரும்பாலான முன்னாள் எம்.பிக்கள் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்கவும் அகில விராஜ் காரியவசமுமே. கட்சி சின்னத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பதாக சஜித் தரப்பை சேர்ந்த சுஜீவ சேனசிங்க நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.
செயற் குழுவில் எடுக்கும் முடிவுகளை ஏற்கப் போவதில்லை எனவும் தெரிவித்த அவர், அகிலவை மாற்ற ரணில் விக்கிரமசிங்க தயாரில்லை எனவும் ரவி கருணாநாயக்கவை செயலாளராக்க முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
எக்காரணம் கொண்டும் ஜக்கிய மக்கள் சக்தி செயலாளர் பதவியில் இருந்து ரஞ்சித் மத்தும பண்டார விலகப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகக் கருத்தரங்கில் கருத்துத் தெரிவித்த அகில விராஜ் காரியவசம், கட்சி செயற்குழுக் கூட்டத்தின் போது செயலாளர் பதவியை இராஜினாமாச் செய்ய இருந்தேன்.
ஆனால் மற்றைய தரப்பு கூட்டத்திற்கு வரவில்லை. இரு தரப்பையும் ஒற்றுமைப்படுத்துவதற்காக பதவியை தியாகம் செய்ய முன்வந்தது போன்று ஏனையவர்களும் தியாகம் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
ஜக்கிய மக்கள் சக்தி யாப்பில் சிக்கல் இருப்பதாக சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர். அதனை கூட்டணியாகப் பதிவதற்கு செயற்குழுவில் முடிவு செய்தாலும் கட்சியாகவே பதிந்துள்ளனர்.
இந்த நிலையில் ஜக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசிய கட்சிற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடவும் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் பிரதித் தலைவர், உபதலைவர், செயலாளர், கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்தும பண்டார அடங்கலான வேட்புமனுக் குழுவும் நியமிக்கப்பட்டது என்றார்.
No comments:
Post a Comment