மத ரீதியான தேர்தல் அரசியல் தமிழ் மக்களின் இருப்பை மிக மோசமாக பலவீனப்படுத்தும் - தமிழ் மக்களை பல கூறுகளாக பிளவு பட வைத்த பெருமை கூட்டமைப்பையே சாரும் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 17, 2020

மத ரீதியான தேர்தல் அரசியல் தமிழ் மக்களின் இருப்பை மிக மோசமாக பலவீனப்படுத்தும் - தமிழ் மக்களை பல கூறுகளாக பிளவு பட வைத்த பெருமை கூட்டமைப்பையே சாரும்

மன்னாரில் மத ரீதியான தேர்தல் அரசியல் தமிழ் மக்களின் இருப்பை மிக மோசமாக பலவீனப்படுத்தும் செயலாகும். இந்துக்களும், கத்தோலிக்கர்களும், தனித்தனியாக தேர்தலில் போட்டியிட முனைவது தமிழ்த் தேசிய அரசியலின் தற்கொலைக்கு சமனானது என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். 

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் இன்று செவ்வாய்க்கிழமை (17) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும் அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்த் தேசியம் என்பது மதம், சாதீயம் பிரதேசவாதம் போன்ற குறுகிய வட்டத்திற்குள் சுருங்கிவிடலாகாது. கடந்த பல தசாப்தமாக தமிழ்த் தேசிய இருப்பியல் பல சூழ்ச்சிகளையும் சந்தர்ப்ப வாதங்களையும் காட்டிக் கொடுப்பு, கயமைத்தனங்களையும் கடந்தே தமிழ்த் தேசியம் நிலைகொண்டது. 

2009 வரை வலிமையடைந்திருந்த தமிழ்த் தேசியத்தை குத்தகைக்கு எடுத்த கூட்டமைப்பு சந்தர்ப்பவாத இணக்க அரசியலின் மூலம் தமிழ்த் தேசியத்தை நலிவடையச் செய்ததுடன் புலி நீக்க அரசியல் தமிழ்த் தேசிய நீக்க அரசியல் என சிறுமைப்படுத்தியதுடன் வழிப்போக்கர்களுக்கு வழிவகுக்கும் கூடாரமாகவே தமிழ்த் தேசிய அரசியலை களம் அமைக்கிறார்கள் என்பதே வேதனையான உண்மை. 

தமிழ் மக்களை பல கூறுகளாக பிளவு பட வைத்த பெருமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே சாரும். மத ரீதியாகவும் பிளவடைந்துள்ளன. அரசாங்கத்தின் பெருவிப்பை கூட்டமைப்பின் பலவீனத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளது. 

குறிப்பாக மன்னாரில் மத ரீதியான தேர்தல் அரசியல் தமிழ் மக்களின் இருப்பை மிக மோசமாக பலவீனப்படுத்தும் செயலாகும். இந்துக்களும், கத்தோலிக்கர்களும், தனித்தனியாக தேர்தலில் போட்டியிட முனைவது தமிழ்த் தேசிய அரசியலின் தற்கொலைக்கு சமனானது ஆகும். 

மிகச் சாதாரணமான விடயமாகிய திருக்கேதீஸவர வளைவு விடயத்தை தமிழ் மக்களுக்கு தலைமை தாங்குகின்றோம் என சொல்கின்ற கூட்டமைப்பு சரியான அனுகுமுறையை ஏற்படுத்தி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்டிருந்தால் இத்தகைய விழைவு ஏற்பட்டிருக்காது. 

இலங்கையில் எங்குமில்லாத அளவுக்கு மத முரன்பாடு என்பது மன்னாரில் அதிகமாக காணப்படுவது யாவரும் அறியாமல் இல்லை. இந்த முரன்பாட்டை அரசியல் தலைமைகள் சீர் செய்திருக்க வேண்டும். அவர்கள் காலத்திற்கு காலம் பிரிந்தாளும் அரசியலையே கையாண்டனர் அதன் விளைவே இப்போது பூதாகரமாகியுள்ளது. அதற்காக மத ரீதியாக தேர்தலில் போட்டியிடுவது என்பது முற்றிலும் தவறானது ஆகும். 

இது நீண்ட கால அடிப்படையில் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குட்படுத்துவதுடன் மத ரீதியான முரன்பாட்டையும் மிக மோசமாக அதிகரிப்பதுடன் தமிழ்த் தேசியத்தை நலிவடையச் செய்து தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குட்படுத்தும். 

ஆகவே இந்த நிலமைகளை புரிதலின்றி செயற்படுகின்றனர் என்பதே வேடிக்கை. பாராளுமன்ற பிரதி நிதித்துவம் பெறுவதனூடாக மத ரீதியான முரன்பாட்டை ஒரு போதும் தீர்த்துவிட முடியாது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். 

ஏட்டிக்குப் போட்டி அரசியல் எதிரிக்கே இலாபமாகும் எல்லோரும் இனத்தைப் பற்றி சிந்திக்காமல் தத்தமது சுயத்தைப்பற்றி சிந்திப்பதே இத்தகைய முரன்பாட்டிற்கும் சுய இலாப முடிவுகளுக்கும் தனித்தனி வழி நகர்வுகளுக்கும் காரணமாகும். 

ஆகவே தமிழ் மக்கள் இவ்வாறு பிளவுபடுவது எதிர்கால இருப்புக்கு ஆரோக்கியமானது அல்ல என்பதை யாவரும் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் இவ்வாறானவர்களுக்கு தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள் என நம்புகின்றோம் என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீரகேசரி

No comments:

Post a Comment