கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் ஆசிரியர் சமப்படுத்தலை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வெளி வலய ஆசிரியர் இடமாற்றங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.
குறித்த இடமாற்றம் நேற்றுமுன்தினம் (2) திங்கள் முதல் அமுலுக்கு வந்தது. எனினும், நேற்று முதல் இது தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
எனவே, அவரவர் பணியாற்றிய பழைய பாடசாலைகளில் அவர்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து பணியாற்றலாம் எனக்கூறப்பட்டுள்ளது.
இதன்போது ஏற்கனவே வெளி வலய சேவையைப்பூர்த்தி செய்த சில ஆசிரியர்களின் பெயர்கள் தவறுதலாக இப்பட்டியலில் இடம்பெற்றிருந்தன. மனித சக்திக்கு அப்பால் கணிணியின் செயற்பாடுகளில் ஏற்பட்ட இத்தவறுகள் மேன்முறையீட்டில் நிவர்த்தி செய்யப்பட்டன.
என்னிடம் பலர் இது பற்றிக்கேட்டனர். வெளி வலய காலத்தைப் பூர்த்தி செய்த அனைவருக்கும் இது விலக்களிக்கப்படும் என்றோம். அவர்களை மீண்டும் அனுப்புவதற்கு நாம் ஒருபோதும் தயாரில்லை. ஆனால், வெளி வலய சேவையை அரைகுறையாக முடித்தவர்கள் அடுத்த அறிவித்தலில் செல்ல வேண்டிவரும்.
ஆசிரியர் தட்டுப்பாடு கூடுதலாக நிலவும் மட்டு. மேற்கு, கல்குடா, கிண்ணியா போன்ற வலயங்களுக்கு ஆசிரியர்களை அனுப்ப வேண்டிய தேவை திணைக்களத்திற்கிருக்கிறது.
அந்த மாணவர்களுக்குக் கல்வியில் சம நீதி, சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். புதிதாக ஆசிரியர்களை நியமிக்கும் பட்சத்தில் இச்சமமின்மை பூரணமாக களையப்பட வாய்ப்பிருக்கிறது என்றார்.
காரைதீவு நிருபர்
No comments:
Post a Comment