மட்டக்களப்புக்கு அழைத்து வருவதனை தடை செய்யுமாறு கண்டன தீர்மானம் நிறைவேற்றம் - தனியார் கல்வி நிலையங்களின் கல்வி நடவடிக்கைளும் இடைநிறுத்தம் - News View

Breaking

Post Top Ad

Saturday, March 14, 2020

மட்டக்களப்புக்கு அழைத்து வருவதனை தடை செய்யுமாறு கண்டன தீர்மானம் நிறைவேற்றம் - தனியார் கல்வி நிலையங்களின் கல்வி நடவடிக்கைளும் இடைநிறுத்தம்

கொரொனா நோய்த் தொற்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளை தடுத்து வைத்து அவதானிக்கும் வகையிலும் ஆரம்ப சிகிச்சைக்காகவும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அழைத்து வரப்படுவதை தடை செய்யக் கோரும் ஓர் கண்டன தீர்மானமும், மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களின் கல்வி நடவடிக்கைகள் யாவும் இடைநிறுத்துவதற்குமான தீர்மானமும் மட்டக்களப்பு மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையின் 31 ஆவது சபை அமர்வு நேற்று (வெள்ளிக்கிழமை) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த அமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிதிக்குழு உள்ளிட்ட குழுக்களின் சிபாரிசுகளுடன் முன்மொழிவுகளும், மாதாந்த வரவு செலவு அறிக்கை தொடர்பான விடயங்களும் மற்றும் மாதாந்த கொடுப்பனவு உட்பட கொள்வனவு விடயங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
குறித்த அமர்வின் விசேட அம்சங்களாக கொரோனா வைரஸ் உலகை ஆக்கிரமித்து வரும் நிலையில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் சில வெளிநாட்டு நபர்களும் அந்த நோய்த் தொற்று இருக்கலாம் எனும் சந்தேகத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அழைத்து வரப்படுவதை தடை செய்யக் கோரும் ஓர் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் கல்வி அமைச்சானது மாணவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் நாடு தளுவியதாக பாடசாலைகளை மூடி இந்நோய்த் தொற்று ஏற்படாமால் தடுக்க மாணவர்களுக்கு விடுமுறையளித்துள்ளது.

இந்நிலையில் இதற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையிலும், மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும் மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களின் கல்வி நடவடிக்கைகள் யாவும் இடைநிறுத்துவதற்குமான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி நேற்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மாநகர நிர்வாக எல்லைக்குள் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மீள ஆரம்பிக்கப்படும் என்றும், இதனை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர முதல்வர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad