கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தம்மீது விதிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை இடைநிறுத்தக் கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட நால்வர் தாக்கல் செய்த மனுக்களை நாளை (11) ஆராய முடிவு செய்துள்ளது.
இம்மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் எம்.பி. ரவி கருணாநாயக்க, பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், மத்திய வங்கி அதிகாரியான சங்கரப்பிள்ளை பத்மநாதன் மற்றும் அவரது சட்டத்தரணியான சமன் குமார ஆகியோரர் ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த மனுக்களின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள, சட்ட மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோருக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என, சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, அவசர விடயமாக இதனைக் கருதி பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2016 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான இரண்டு கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அரசாங்கத்திற்கு ரூபா. 50 பில்லியனுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் வழக்கில் முன்னாள் எம்.பி. ரவி கருணாநாயக்க, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்ய, கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை பிடியாணை உத்தரவை வழங்கியது.
No comments:
Post a Comment