ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏனைய 59 பேருக்கும் எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஏப்ரல் 21 இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஸஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டனர்.
ஒரு சிலருக்கு பிணை வழங்கப்பட்டபோதிலும் ஏனைய சந்தேகநபர்கள் இன்று (10) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களுக்கு எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
நுவரேலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
(மட்டக்களப்பு நிருபர் - ஜவ்பர்கான்)
No comments:
Post a Comment