அரசாங்க நிதி சட்டபூர்வமாக பயன்படுத்தப்படுகின்றமையானது, சமூகத்துக்காக தமிழ் முற்போக்கு கூட்டணி பெற்றுக் கொடுத்த மகத்தான வெற்றிகளுள் பிரதானமானதாகும் - வேலுகுமார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 10, 2020

அரசாங்க நிதி சட்டபூர்வமாக பயன்படுத்தப்படுகின்றமையானது, சமூகத்துக்காக தமிழ் முற்போக்கு கூட்டணி பெற்றுக் கொடுத்த மகத்தான வெற்றிகளுள் பிரதானமானதாகும் - வேலுகுமார்

பெருந்தோட்டப் பகுதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இன்று அரசாங்க நிதி சட்டபூர்வமாக பயன்படுத்தப்படுகின்றமையானது, எமது சமூகத்துக்காக தமிழ் முற்போக்கு கூட்டணி பெற்றுக் கொடுத்த மகத்தான வெற்றிகளுள் பிரதானமானதாகும் - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

கண்டி, ஹந்தான் வெஸ்ட் டிவிசனின் நீண்ட காலமாக நிலவிவந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் கங்கவட்ட கோரள பிரதேச சபை ஊடாக குடிநீர் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு, செயல்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வேலுகுமார் மேலும் கூறியதாவது, "1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தில் இருந்த சில சரத்துகள் - குறிப்பாக 33 ஆம் சரத்தானது தோட்டப்பகுதி அபிவிருத்திக்கு பெரும் தடையாக இருந்துவந்ததுஇச்சட்டத்தின் பிரகாரம் தோட்டப்பகுதியானது தனியார் பகுதியாக - தனிப்பட்ட பகுதியாக கருதப்பட்டதால் அபிவிருத்திகளுக்கு அரசால் நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால், அரச நிறுவனங்களாலும் உரிய சேவைகளை வழங்கமுடியாத நிலை இருந்தது.

எனினும், அந்த தடைக்கல்லை தமிழ் முற்போக்கு கூட்டணியினராகிய நாம் உடைத்தோம். 31 ஆண்டுகளுக்கு பின்னர் பெருந்தோட்டப் பகுதியையும் அரச பொறிமுறைக்குள் உள்வாங்குவதற்கான திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றினோம். 

இதன்படி நகரபகுதிக்கும், கிராமப் பகுதிக்கும் நிதிகள் ஒதுக்கப்படுவதுபோல் தோட்டப் பகுதி அபிவிருத்திக்கும் ஒதுக்கீடுகள் இன்று இடம்பெறுகின்றன. இதன் ஓர் அங்கமாகவே குடிநீர் திட்டத்தை முன்னெடுக்க அரச நிதி இங்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

80 ஆண்டுகளாக அரசியல் நடத்துகின்றோம் என மார்தட்டுபவர்களால் மலையகத்துக்காக ஒரு புள்ளியைகூட உரிய வகையில் வைக்க முடியாமல் போனது. ஆனால், நாம் புள்ளி வைத்து, எம் சமூக விடுதலைக்கான கோலத்தை அழகாக போட்டு வந்தோம். இறுதி தருவாயை எட்டும் நிலையில்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

எனவே, எம்மால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஆளுங்கட்சியிலுள்ள மலையக பிரதிநிதிகளிடம் கேட்டுக் கொள்கின்றோம். சமூகத்துக்காக நாம் போட்ட விடுதலை என்ற கோலத்தை, அரசியல் நோக்கத்துக்காக அலங்கோலமாக்கி விட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.

அதேவேளை, வேலுகுமார் என்ன செய்தார் என கேள்வி எழுப்புவதற்கும், தவறுகளை சுட்டிக் காட்டுவதற்கும் மக்களுக்கு உரிமை இருக்கின்றது. ஆனால், கோமாவில் இருந்து தேர்தலுக்காக எழுந்து வந்துள்ள கோமாளி கூட்டத்துக்கு எம்மை விமர்சிப்பதற்கு எவ்வித அருகதையும் கிடையாது என்பதை கூறிவைக்க விரும்புகின்றோம்.

கோமாளிக் கூட்டத்தால் 80 ஆண்டுகளாக செய்ய முடியாத பல உரிமைசார் விடயங்களை நாம் வெறும் நான்கரை ஆண்டகளிலேயே செய்துமுடித்துவிட்டோம்." - என்றார்.

No comments:

Post a Comment