தேர்தலை எக்காரணத்திற்காகவும் பிற்போட முடியாது என குறிப்பிடுவது அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையினை வெளிப்படுத்தியுள்ளது - News View

About Us

About Us

Breaking

Sunday, March 15, 2020

தேர்தலை எக்காரணத்திற்காகவும் பிற்போட முடியாது என குறிப்பிடுவது அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையினை வெளிப்படுத்தியுள்ளது

(இராஜதுரை ஹஷான்) 

பொதுத் தேர்தலை எக்காரணத்திற்காகவும் பிற்போட முடியாது என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ள கருத்து அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையினை மாத்திரம் வெளிப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதை காட்டிலும் அரசாங்கம் பொதுத் தேர்தலில் அதீத கவனம் செலுத்துகின்றது. இவ்வாறான நெருக்கடி நிலையிலும் சீனாவிற்கு சிறப்பு சலுகைகள் வழங்குவது ஏன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர கேள்வியெழுப்பினார். 

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மாணவர்களை பாதுகாப்பதற்காக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை. ஆசிரிய சங்கத்தினர் நாளை மறுதினம் தொடக்கம் முன்னெடுக்கவிருந்த தொடர் பணிபுறக்கணிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளவே பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனை பொய்யென்று அரசாங்கத்தினால் குறிப்பிட முடியுமா எனவும் சவால் விடுத்தார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை காரியாலத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், எக்காரணிகளுக்காகவும் பொதுத் தேர்தல் காலம் தாழ்த்தப்படாது என்று சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை அவரது பொறுப்பற்ற தன்மையினை மாத்திரம் வெளிப்படுத்துகின்றது. இன்றும் இவர்கள் மக்களை பலியிட்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளவே முயற்சிக்கின்றார்கள். 

உலக நாடுகள் இந்த கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்கு முன்னெடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் மக்களை ஏமாற்றும் செயற்பாடுகள் மாத்திரம் முன்னெடுக்கப்படுகின்றன. பொதுத் தேர்தலை தற்போது நடத்துவது பிரதான விடயமல்ல, தேர்தலை குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ஏனும் பிற்போட முடியும். இடைப்பட்ட காலத்தில் கொரேனா வைரஸ் தாக்கம் குறித்து நிரந்தர தீர்வினை அனைவரும் ஒன்றினைந்து முன்னெடுக்க முடியும். 

மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாடசாலைகளுக்கும், பல்கலைக்கழங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த விடுமுறை காலத்துக்குள் அனைத்து பிரச்சினைகளையும் அரசாங்கத்தினால் சீர் செய்து விட முடியுமா, மாணவர்களின் மீது அக்கறை கொண்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை. அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிராக நாளைமறுதினம் தொடக்கம் ஆசிரிய சங்கத்தினர் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவே விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனை பொய்யென்று அரசாங்கத்தினால் மறுக்க முடியாது. 

பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு இரண்டு வாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையும் அரசாங்கம் தனக்கு சாதகமாகவே பயன்படுத்திக் கொள்கின்றது. நாட்டுக்குள் வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கு இத்தாலி மற்றும் தென்கொரியாவில் இருந்து வரும் இலங்கையர்கள் மாத்திரம் தனிமைப்படுத்தப்படுகின்றார்கள். ஆனால் சீன பிரஜைகளுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இதன் பின்னணி என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் உட்பட அவரை தற்போது சார்ந்துள்ளோரும் ராஜபக்ஷர்களுக்கு ஆதரவான டீல் அரசியலை முன்னெடுத்து செல்கின்றார்கள். என்பது அனைவரும் தெரிந்த விடயம். நாட்டு மக்களின் நலன் கருதியே தேர்தலை ஒரு மாதத்திற்கேனும் பிற்போடுமாறு கோரிக்கை விடுக்கின்றோம். ஜனாதிபதி அரசியல் காரணிகளை புறம்தள்ளி தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்குவதாக குறிப்பிட்ட வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். என்றார்.

No comments:

Post a Comment