மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு நோயாளியை கொண்டு சென்றமைக்கு எதிர்ப்பு : அப்பகுதியில் நிலவிய பதற்றத்தையடுத்து 9 பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Friday, March 13, 2020

மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு நோயாளியை கொண்டு சென்றமைக்கு எதிர்ப்பு : அப்பகுதியில் நிலவிய பதற்றத்தையடுத்து 9 பேர் கைது

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொரோனா தொற்று நோய் இருக்கலாம் என சந்தேகத்தில் ஒருவரை நேற்று கொண்டு வந்த அம்பியூலன்ஸ் வண்டியை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்ததையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

இன்று காலை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த 47 வயதுடைய ஒருவர் கடும் காய்ச்சல் உட்பட கொரோனாவுக்கான சில நோய் அறிகுறிகள் காணப்பட்டதன் காரணமாக அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடமையாற்றி விடுமுறையில் போரதீவுப்பற்று திக்கோடைக்கு சென்ற நிலையில் அங்கு காய்ச்சலுக்குட்பட்டதன் காரணமாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்றுள்ளார். 
கொழும்பில் உள்ள ஹோட்டலில் இவர் சீனர்களுடன் இருந்துள்ளதாகவும் அதன் காரணமாக இவரின் நோய் தொடர்பில் வைத்தியர்கள் சந்தேகம் கொண்டதன் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை கேள்வியுற்ற பெண்கள் அமைப்பு மற்றும் வைத்தியசாலை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து போதனா வைத்தியசாலைக்குள் அம்பியூலன்ஸ் வண்டியை செல்லவிடாது வைத்தியசாலையின் எல்லா வெளி வாசல் கதவுகளையும் பூட்டி தடுத்தனர். 

இதனையடுத்து அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டதால் பொலிசார் ஆர்ப்பாட்டகாரர்களை விரட்டியடித்து நோயாளியை பல கஷ்டங்களின் மத்தியில் வைத்தியசாலைக்குள் கொண்டு சென்றனர்.
இவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முதல் நபராகவும் இவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்ததுடன் வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியதாக சந்தேகத்தில் ஒன்பது பேரை கைது செய்தனர்.

தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினை சூழ விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, ஆலையடிவேம்பு நிருபர்கள்

No comments:

Post a Comment