கப்பலில் கடத்தப்பட்ட 500 கிலோ கிராம் ஐஸ், 500 கிலோ கிராம் கொக்கைன் மீட்பு - 200 பைக்கற் பாபுல்,100 கிராம் போதை மாத்திரைகளும் மீட்பு - கடந்த 02 மாதங்களில் கைப்பற்றப்பட்ட 03 ஆவது கப்பல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 31, 2020

கப்பலில் கடத்தப்பட்ட 500 கிலோ கிராம் ஐஸ், 500 கிலோ கிராம் கொக்கைன் மீட்பு - 200 பைக்கற் பாபுல்,100 கிராம் போதை மாத்திரைகளும் மீட்பு - கடந்த 02 மாதங்களில் கைப்பற்றப்பட்ட 03 ஆவது கப்பல்

கப்பலொன்றில் கடத்தப்பட்ட சுமார் 500 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 500 கிலோ கிராம் கொக்கைன் போதைப் பொருளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலான 'ஶ்ரீலங்நௌ சயுர'வினால் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின்போது, இலங்கையின் தெற்கு கடற்பரப்பிலிருந்து 463 கடல் மைல் தூரத்தில் (சுமார் 835 கி.மீ.) பயணித்த கப்பலொன்றே இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை (28) 9.30 மணியளவில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கப்பல் சர்வதேச கடலில் எவ்வித அரச கொடியும் இன்றி பயணித்த நிலையில் கடற்படையினர் அதனை சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

இதன்போது, கப்பலிலிருந்து, சுமார் 500 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 500 கிலோ கிராம் கொக்கைன் என சந்தேகிக்கப்படும் போதைப் பொருளை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

அத்துடன், பாபுல் எனப்படும் போதைப் பொருள் 200 பைக்கற்றுகளும் அடையாளம் காணப்படாத 100 கிராம் போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவற்றின் சரியான மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை எனவும் பொதுவாக சுமார் ரூபா 12,500 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இக்கப்பலை மேலதிக விசாரணைகளுக்காக நாளையதினம் (01) திக்கோவிட்ட துறைமுகத்திற்கு செலுத்திச் சென்று கடுமையான சோதனையிட திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 02 மாதங்களில் கைப்பற்றப்பட்ட 03 ஆவது கப்பல்
கடந்த 02 மாதங்களில் சர்வதேச கடற்பரப்பிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கொண்டு வந்த நிலையில் கைப்பற்றப்பட்ட 03ஆவது வெளிநாட்டு கப்பல் இதுவாகும்.

இதற்கு முன்னர், கடந்த பெப்ரவரி 22 மற்றும் 25ஆம் திகதிகளில், இலங்கைக்கு போதைப் பொருள் கடத்திய இரு வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் அதில் இலங்கைக்கு போதைப் பொருள் கடத்திய இலங்கை மீனவ படகு ஒன்று கைது செய்யப்பட்டதோடு, 16 வெளிநாட்டவர் மற்றும் ஐந்து இலங்கையரும், இது தொடர்பில் தென்னிலங்கையில் 06 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்படை தொடர்ந்து செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கப்பல்களைத் தேடி வருகிறது. போதைப் பொருள் விநியோக சங்கிலியில் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பங்காளர்களைப் பின்தொடர்வதற்காக இலங்கை கடற்படை பொலிஸ் போதைப் பொருள் பணியகத்துடன் இணைந்து செயல்பட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தினகரன்

No comments:

Post a Comment