பெருந்தோட்டப் பகுதியில் உள்ள மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கவும், கொரோனா நோயாளிகள் 10 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 15, 2020

பெருந்தோட்டப் பகுதியில் உள்ள மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கவும், கொரோனா நோயாளிகள் 10 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம்

பொதுமக்கள் பெருமளவில் ஒன்றுகூடுவதை தவிர்ப்பதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றை பெருமளவில் தடுக்க முடியும். தற்பொழுது மலையக பகுதியில் உள்ள மக்கள் இது தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

வைரஸ் தொற்றை தடுப்பதற்காக நாம் முன்னெடுத்துள்ள முக்கிய நடவடிக்கையில் ஒன்றான மக்கள் பெருந்திரளாக ஒன்றுகூடுவதை தவிர்க்கும் அறிவுறுத்தலை நாட்டின் பெரும்பாலான பகுதியில் உள்ள மக்கள் கடைப்பிடிக்கின்றனர்.

ஆனால் பெருந்தோட்ட பகுதிகளில் இந்த நிலையை காணக்கூடியதாக இல்லை என்று தகவல்கைள் கிடைத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் இந்த பிரதேச மக்கள் கூடுதலாக கவனம் செலுத்துவதன் மூலம் இந்த நோய் தொற்றை தடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற கொவிட் - 19 என்ற கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பில் விசேட வைத்தியர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ, குடிவரு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் சரத் ரூபசிறி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கொரொனா வைரஸ் தொற்று தொடர்பாக இன்றைய நிலவரம் குறித்து டொக்டர் ஜாசிங்க கருத்து தெரிவிக்கையில் கொரோனா வைரஸ் தொடர்பில் தற்பொழுது குறிப்பிடத்தக்க வகையில் எதுவும் இல்லை. 

நேற்று அறிவித்த படி மொத்தமாக 10 பேர் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களது நிலைமையில் முன்னேற்றம் காணப்படுகின்றது.

நோய்த் தாக்கத்துக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 133 பேர் தற்பொழுது இருக்கின்றனர். இவர்களுள் 9 பேர் வெளிநாட்டவர், தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் 4,405 பேர் இருக்கின்றனர். இவர்களுள் 2,679 பேர் இலங்கையர், 1,120 பேர் சீன நாட்டவர் என்றும் அவர் தெரிவித்தார். சீனாவில் இருந்து இலங்கைக்கு தொழிலுக்காக வருவோர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர் என்றார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

No comments:

Post a Comment