யாழ். சர்வதேச விமான நிலைய பயணிகள் தொடர்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதமருக்கு கடிதம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 18, 2020

யாழ். சர்வதேச விமான நிலைய பயணிகள் தொடர்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதமருக்கு கடிதம்

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தினூடாக பயணிக்கும் பயணிகளின் அதிகரித்த கட்டணத்தைக் குறைக்குமாறும், இந்திய நாணயத்தை இலங்கையில் மாற்றுவதற்கேற்ற வசதியையும், பயணத்தின்போது எடுத்து செல்வதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும். என பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், யாழ். வணிகர் கழகத்தின் உபதலைவருமான இ.ஜெயசேகரன் கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார். 

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் கடந்த 11.11.2019 திகதி தனது முதலாவது விமான சேவையினை ஆரம்பித்ததிலிருந்து விமான பயணச்சீட்டுக்கள் அதிகமான விலைக்கு விற்கப்படுகிறது. 

இது கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக மேற்கொள்ளப்படும் சில இந்திய விமான நிறுவனங்களின் கட்டணத்தை விட அதிகமாக காணப்படுகிறது. இது வட மாகாண சர்வதேச விமான நிலையத்தினூடாக பயணிக்கும் பயணிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

யாழ்ப்பாண விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையம் போன்ற வசதிகள் இங்கே இல்லை. அத்துடன் பயணி ஒருவர் தனது விமானப் பயணத்தின் போது பயணப் பொதியாக சுமார் 15 கிலோவும், கையில் எடுத்துச் செல்லக் கூடியதாக 5 கிலோவுமாக 20 கிலோ மட்டுமே கொண்டுவர அல்லது எடுத்துச்செல்ல முடியும். 

இதேவேளை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக பயணிக்கும் பயணி ஒருவர் தனது விமானப் பயணத்தின் போது பயணப் பொதியாக சுமார் 30 கிலோவும், கையில் எடுத்துச் செல்லக் கூடியதாக 7 கிலோவுமாக 37 தொடக்கம் 40 கிலோ வரையான பயணப் பொதிகளை கொண்டுவர அல்லது எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றார்கள். 

ஆகவே இப்படியான பல வசதி குறைபாடுகளுடன் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தினூடாக பயணிக்கும் பயணி ஒருவருக்கு அதிகளவான கட்டணத்தினை அறவிடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இது ஒரு பிராந்திய வசதி குறைந்த விமான நிலையம். 

ஆகையால் விமான பயணச்சீட்டுடன் சேர்த்து அறவிடப்படும் விமான நிலைய வரியினை 50 வீதம் குறைப்பு மேற்கொள்ளுமிடத்தில் பயணிகள் குறைந்த தொகைக்கு விமானப் பயணச் சீட்டினை பெறக்கூடியதாக இருக்கும். இதன் மூலம் வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களைச் சேர்ந்த அதிகளவான பயணிகள் பயன்பெறக்கூடியதாகவும் இருக்கும். 

எனவே பயணிகளின் விமானச்சீட்டுக்களின் விலையினை குறைத்து அவர்கள் பயன்பெற தாங்கள் ஆவன செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன். 

மேலும் 14 நாட்டு நாணயங்களை இலங்கையில் உள்ள வங்கிகளில் மாற்றுவதற்கு அல்லது வங்கிகளில் பெறமுடியுமென மத்திய வங்கியின் சுற்றுநிரூபம் கூறுகிறது. 

ஆனால் நாள் தோறும் இலங்கையிலிருந்து பெருந்தொகையான பயணிகள் இந்தியாவிற்கும், இந்தியாவிலிருந்து இலங்கைக்கும் விமானம் மூலம் பயணிக்கின்றார்கள். ஆனால் இந்திய ரூபாவை எடுத்துச் செல்லவோ அல்லது அங்கிருந்து எடுத்துவரவோ சட்ட ரீதியான அனுமதி இல்லை. இதன் மூலம் பயணிகள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள். 

ஆகையால் பிரதமர் மற்றும் நிதியமைச்சராகிய தாங்கள் இதனை கருத்திற்கொண்டு ஒரு குறிப்பிட்ட தொகை இந்திய ரூபாவை இலங்கையில் உள்ள வங்கியில் பெறுவதற்கும், மாற்றுவதற்கும் மற்றும் எடுத்து செல்வதற்கும் தாங்கள் ஆவன செய்ய வேண்டுமென எதிர்பார்க்கின்றோம். 

இதன் மூலம் இந்தியாவிற்கு செல்லும் பயணிகள் விமானத்திலிருந்து இறங்கி வெளியேறும் போது தங்கள் அத்தியாவசிய தேவைக்காக இந்தியப் பணத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆகையால் இதை தாங்கள் சட்ட ரீதியாக அமுல்படுத்த ஆவன செய்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன் என்றுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad