ஊடகவியலாளர் சந்திப்பில் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாட்டுக்காக படை வீரர்கள் அமைப்பின் ஏற்பாட்டாளரும், ஓய்வுபெற்ற மேஜரும், சட்டத்தரணியுமான அஜித் பிரசன்ன கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதிமன்றத்தினால் அவர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக கணேபொல உத்தரவிட்டார்.
மேலும் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொள்ள முற்றுமுழுதாக தடை விதித்த நீதவான் இது தொடர்பில் அனைத்து ஊடக பிரதானிகளுக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்ற பதிவாளருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த ஜனவரி 12ஆம் திகதி ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டு வரும் வழக்கு தொடர்பில் வெளியிட்ட கருத்துகள் மூலம் நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நீதிமன்றில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய, கடந்த ஜனவரி 24ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையான அவருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டதோடு, சிறைச்சாலை மூலம் அவரை, கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தி அவரது மனநலம் தொடர்பில் வைத்திய அறிக்கையை பெற நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் தம்மிக கணேபொல இதன்போது உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment